மங்களூரு அருகே தண்டவாளத்தில் மண்சரிந்து விழுந்தது கேரளா, மும்பை, கோவா செல்லும் ரெயில்களின் சேவை பாதிப்பு


மங்களூரு அருகே தண்டவாளத்தில் மண்சரிந்து விழுந்தது கேரளா, மும்பை, கோவா செல்லும் ரெயில்களின் சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 24 Aug 2019 4:30 AM IST (Updated: 23 Aug 2019 11:00 PM IST)
t-max-icont-min-icon

மங்களூரு அருகே தண்டவாளத்தில் மண்சரிந்து விழுந்தது. இதனால் கேரளா, மும்பை, கோவா செல்லும் ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மங்களூரு, 

மங்களூரு அருகே தண்டவாளத்தில் மண்சரிந்து விழுந்தது. இதனால் கேரளா, மும்பை, கோவா செல்லும் ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் மண்சரிந்து விழுந்தது

தட்சிணகன்னடா மாவட்டத்தில் நடப்பு மாதம் முதல் வாரத்தில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் ஏராளமான மக்கள் முகாமில் தஞ்சமடைந்தனர். கடந்த ஒரு வாரமாக மழையின் தீவிரம் குறைந்தது. இதையடுத்து கிராமங்களுக்குள் புகுந்த வெள்ள நீர் வடியத் தொடங்கியது. இதனால் முகாம்களில் தங்கியிருந்த மக்கள் வீடுகளுக்கு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் தட்சிணகன்னடா மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. நேற்றும் மங்களூரு, பண்ட்வால், கொல்லூர் உள்பட மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. கனமழைக்கு மங்களூரு அருகே குலசேகர் என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டது. மண் சரிவு ஏற்பட்டு அந்த பகுதியில் செல்லும் ரெயில் தண்டவாளத்தில் மணல், கற்கள் விழுந்தன.

ரெயில் சேவை பாதிப்பு

இதனால் அந்த பாதையில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொங்கன் ரெயில்வே ஊழியர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடந்தது. இருப்பினும் தொடர்ந்து நேற்றும் மாலை வரை மழை பெய்தபடி இருந்தது. இதனால் ரெயில் தண்டவாளத்தில் சரிந்து விழுந்த மண், கற்களை அகற்றும் பணி தடைபட்டு வந்தது.

தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டதால், கேரளா, மும்பை, கோவா செல்லும் 10-க்கும் மேற்பட்ட ரெயில்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மங்களூரு-கோவா பயணிகள் ரெயில் தொக்கூர் ரெயில் நிலையத்திலும், மங்களூரு-மும்பை மத்தியஸ்கந்தா எக்ஸ்பிரஸ் சூரத்கல் ரெயில் நிலையத்திலும், மும்பை-எர்ணாகுளம் நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ஜோகட்டே ரெயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டன. இதனால் ரெயில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதுபோல் அந்தந்த ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்கள் புறப்பட்டு சென்றன.


Next Story