வெடிமருந்து தொழிற்சாலையில், தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்


வெடிமருந்து தொழிற்சாலையில், தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 24 Aug 2019 4:15 AM IST (Updated: 23 Aug 2019 11:06 PM IST)
t-max-icont-min-icon

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குன்னூர்,

குன்னூர் அருகே உள்ள அருவங்காட்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை உள்பட நாடு முழுவதும் உள்ள 41 ராணுவ தளவாட தொழிற்சாலைகளை பொதுத்துறை நிறுவனங்களாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கடந்த 20-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அதன்படி அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையிலும் தொழிலாளர்கள் 4-வது நாளாக நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மேலும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தொழிலாளர்கள் உண்ணாவிரதத்தை தொடங்கினர். இதற்கு சி.எப்.எல்.யு. தொழிற்சங்க தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க பொதுச்செயலாளர் திலிப்குமார், டி.எல்.எப்.யு. தொழிற்சங்க நிர்வாகி சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பத்ரி தொடங்கி வைத்தார். போராட்டம் குறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களாக இருந்த எச்.பி.எப். போட்டோ பிலிம் தொழிற்சாலை, எச்.எம்.டி. தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. எனவே தற்போது அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையும் பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டால், தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் ஆரம்பத்தில் பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டு, அதன்பிறகு தனியாருக்கு தாரைவார்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் உள்ள 41 தொழிற்சாலைகளிலும் போராட்டம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. அதில் 100 சதவீத தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். வருகிற 27-ந் தேதி நீலகிரி மாவட்ட விவசாய சங்கம் சார்பில் தொழிற்சாலையை பாதுகாக்க போராட்டம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story