தேவர்சோலை அருகே, கோவிலை சேதப்படுத்திய காட்டுயானைகள்


தேவர்சோலை அருகே, கோவிலை சேதப்படுத்திய காட்டுயானைகள்
x
தினத்தந்தி 23 Aug 2019 11:00 PM GMT (Updated: 23 Aug 2019 6:00 PM GMT)

தேவர்சோலை அருகே காட்டுயானைகள் கோவிலை சேதப்படுத்தின.

கூடலூர்,

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி செம்பக்கொல்லி ஆதிவாசி கிராமத்துக்குள் காட்டுயானைகள் அடிக்கடி வருகிறது. போதிய தெருவிளக்குகள் இல்லாததால் காட்டுயானைகள் வருகை உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அப்பகுதியில் குட்டியுடன் காட்டுயானைகள் நுழைந்தன. பின்னர் அம்மனி(வயது 80) என்பவரின் வீட்டை முற்றுகையிட்டன. இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் வயது மூப்பு காரணமாக தனியாக வசித்து வருகிறார்.

இந்த சமயத்தில் காட்டுயானை ஒன்று அம்மனி வீட்டின் ஒருபகுதியை சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு அவர் எழுந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது காட்டுயானைகள் நிற்பதை கண்டு அச்சத்தில் பின்பக்க வாசல் வழியாக வெளியேறி இருட்டுக்குள் ஓடி அருகே வசிப்பவரின் வீட்டுக்குள் தஞ்சம் அடைந்தார். பின்னர் காட்டுயானைகள் அப்பகுதியில் வெகுநேரம் நின்றிருந்தன. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக அம்மனியின் வீட்டை முழுமையாக சேதப்படுத்தவில்லை.

ஆனால் ஆதிவாசி மக்களின் கோவிலை காட்டுயானைகள் சேதப் படுத்தின. இதனால் கோவில் கொட்டகையுடன் தரையில் விழுந்து கிடந்தது. இதைத்தொடர்ந்து ஆதிவாசி மக்கள் திரண்டு வந்து காட்டுயானைகளை விரட்டியடித்தனர். இதனால் விடியற்காலையில் காட்டுயானைகள் அங்கிருந்து வெளியேறி வனத்துக்குள் சென்றது. மேலும் கோவிலை சேதப்படுத்தி விட்டதால் ஆதிவாசி மக்கள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து ஆதிவாசி மக்கள் கூறியதாவது:-

குடிசை மற்றும் வீடுகளை காட்டுயானைகள் அடிக்கடி சேதப்படுத்தி வருகிறது. வனத்துறையினர் வந்து நேரில் பார்வையிடுகின்றனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர். ஆனால் சேதம் அடைந்த வீடுகளை சீரமைக்க எந்த நிதியும் வழங்குவது இல்லை. இதனால் கூலி வேலைக்கு சென்று கிடைக்கும் வருமானத்தை கொண்டு வீட்டை சீரமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தற்போது கோவிலை சேதப்படுத்தி விட்டது. எனவே வனத்துறையினர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதேபோன்று மஞ்சூர் அருகே உள்ள கெத்தை மின்வாரிய அலுவலகம் அருகில் காட்டுயானைகள் உலா வந்தன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்தனர். மேலும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். 

Next Story