பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை: கம்ப்யூட்டர் என்ஜினீயர், கல்லூரி மாணவர்கள் 2 பேருடன் கைது
பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்த கம்ப்யூட்டர் என்ஜினீயர், 2 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்த கம்ப்யூட்டர் என்ஜினீயர், 2 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5.30 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கல்லூரி மாணவர்கள்
பெங்களூரு சுத்தகுன்டே பாளையா, அதை சுற்றியுள்ள பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சுத்தகுன்டே பாளையா போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதில், ஈடுபடும் கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்த வம்சி கிருஷ்ணா (வயது 31), சித்தார்த் சந்தோஷ் (19) மற்றும் அரவிந்த் பாஸ்கர்(19) என்று தெரிந்தது. இவர்களில் வம்சி கிருஷ்ணா கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். அவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். சந்தோசும், அரவிந்தும் பெங்களூருவில் தங்கியிருந்து தனியார் கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்தது தெரியவந்தது.
ரூ.5.30 லட்சம் மதிப்பு
இவர்கள் 3 பேரும் கோவாவில் இருந்து எம்.டி.எம்.ஏ., கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் வாங்கி, அதனை பெங்களூருவுக்கு கடத்தி வந்துள்ளனர். பின்னர் அந்த போதைப்பொருட்களை கல்லூரி மாணவர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்களுக்கு விற்பனை செய்வதை 3 பேரும் தொழிலாக வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
கைதானவர்களிடம் இருந்து 24 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள், 1 கிலோ 200 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். கைதான 3 பேர் மீதும் சுத்தகுன்டே பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story