குளங்கள் தூர்வார உடனடியாக அனுமதி வழங்கப்படும் - கலெக்டர் கதிரவன் தகவல்


குளங்கள் தூர்வார உடனடியாக அனுமதி வழங்கப்படும் - கலெக்டர் கதிரவன் தகவல்
x
தினத்தந்தி 24 Aug 2019 3:45 AM IST (Updated: 24 Aug 2019 12:17 AM IST)
t-max-icont-min-icon

குளங்கள் தூர்வார உடனடியாக அனுமதி வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

ஈரோடு,

ஒளிரும் ஈரோடு அமைப்பு சார்பில் தன்னார்வ அமைப்புகளுடன் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைப்பின் தலைவர் எம்.சின்னசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மழைநீர் சேகரிப்பு என்பது அரசின் திட்டம் மட்டும் அல்ல. அது மக்களுக்கான திட்டம். ஒரு துளி நீரைக்கூட உற்பத்தி செய்ய முடியாது. அது இயற்கையின் கொடை. நமக்கு பற்றாக்குறை ஏற்பட்ட பிறகு நீரின் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டு உள்ளது. தற்போது நமது முன்னோர்கள் பின்பற்றிய இயற்கை முறையை மீண்டும் பின்பற்ற தொடங்கி இருக்கிறோம். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு நொய்யல் ஆற்றில் தண்ணீர் சென்றது. அங்கு சாயக்கழிவு நீர் கலந்ததன் விளைவு, இன்று நம்மால் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் அதிகமாக தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. அந்த பகுதியை சுற்றியுள்ள 13 கிராமங்களில் குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே தொழில்நுட்ப வளர்ச்சியின் பெயரில் தொழிற்சாலைகள் அதிகமாக பெருகிய வேளையில், சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து இருக்கிறது. இந்த பாதிப்புகளை சரிசெய்ய மழைநீரை சேமிப்பது, மரக்கன்றுகளை நடுவது போன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

வருங்கால சந்ததியினருக்கு பணம், செல்வத்தை சம்பாதித்து கொடுக்க முடியும். ஆனால் குடிநீரையும், சுத்தமான காற்றையும் உருவாக்க முடியாது என்பதால், பாதுகாக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்துக்கு வளம் சேர்க்கும் ஆறாக பவானி ஆறு விளங்குகிறது. இதேபோல் காவிரி ஆறும் செல்கிறது. இந்த ஆறுகள் மாசுபடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அங்கு தண்ணீரை தேக்கும் வகையில் 3 தடுப்பணைகள் கட்ட தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் செல்லும் வாய்க்கால்களில் விடப்படும் தண்ணீர் மீண்டும் கசிவுநீராக ஆற்றுக்கே சென்றடைகிறது. அந்த காலத்திலேயே மறுசுழற்சி முறை இயற்கையாக கையாளப்பட்டு இருக்கிறது. அதன்வழியில் மறுசுழற்சி முறையை நாமும் அதிகமாக பின்பற்ற வேண்டும். வீடுகள், விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள கழிப்பறையில் அதிகமாக தண்ணீர் செலவிடப்படுகிறது. அங்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி கொள்ளலாம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இதேபோல் பல்வேறு விதங்களில் தண்ணீரை சேமிக்கலாம்.

வருகிற செப்டம்பர் மாதம் 10-ந் தேதிக்குள் அனைத்து இடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும். அதன்பிறகு மழை பொழிய தொடங்கிவிடும். ஈரோடு மாவட்டத்தில் 1,030 குளம், ஏரிகள் உள்ளன. இதை தூர்வாருவதற்கு தன்னார்வலர்கள் அனைவரும் முன்வரலாம். இதற்காக விண்ணப்பித்தால் உடனுக்குடன் அனுமதி வழங்கப்படும். மேலும், ஒரு குளத்தை பராமரிப்பதற்காக தன்னார்வலர்கள் 3 ஆண்டுகள் வேண்டுமென்றாலும் பொறுப்பு எடுத்துக்கொள்ளலாம். அதற்கான உத்தரவாதமும் வழங்கப்படும். அதன்மூலம் அவர்கள் குளத்தை முழுமையாக பராமரிக்க முடியும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

முன்னதாக ஒளிரும் ஈரோடு அமைப்பின் நீர்மேலாண்மைக்குழு பொறுப்பாளர் எம்.சி.ராபின் பேசுகையில், “கடந்த 5 ஆண்டுகளில் ஒளிரும் ஈரோடு அமைப்பு சார்பில் 35 குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளன. 2 தடுப்பணைகள் கட்டப்பட்டன. இந்த பணிகளுக்காக சுமார் ரூ.5 கோடி செலவிடப்பட்டு உள்ளது. மேலும், நசியனூர், வெள்ளோட்டம்பரப்பு, மலையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளங்கள் தூர்வாரப்பட உள்ளன”, என்றார்.

இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் பாலகணேஷ், ஒளிரும் ஈரோடு அமைப்பின் செயலாளர் எஸ்.கணேசன், நிர்வாகிகள் எஸ்.கே.எம்.சிவ்குமார், ஆர்.ஜி.சுந்தரம், ஞானவேல் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story