வெள்ளப்பெருக்கு குறைந்ததால் உற்சாகம்: குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கற்கள் விழுந்து 3 பேர் காயம்
வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி,
வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். ஐந்தருவியில் சிறிய கற்கள் விழுந்து 3 பேர் காயம் அடைந்தனர்.
ஆர்ப்பரித்துக் கொட்டிய தண்ணீர்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் மதியம் அங்கு பெய்த கனமழை காரணமாக ஐந்தருவியில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து மாலையில் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகிய அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் ஆர்ச் தெரியாத அளவுக்கு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த சுற்றுலா பயணிகள், அருவிக்கரைகளை மட்டும் பார்த்துச் சென்றனர்.
குளிக்க அனுமதி
இந்த நிலையில் நேற்று காலை குற்றாலத்தில் வெயில் அடித்தது. சாரல் மழை இல்லை. அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க போலீசார் அனுமதித்தனர்.
இதன் காரணமாக ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளுக்கும் சென்று சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அதிகமாக இருந்தது.
கற்கள் விழுந்து 3 பேர் காயம்
ஐந்தருவியில் நேற்று மதியம் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது பெண்கள் குளிக்கும் பகுதியிலும், ஆண்கள் குளிக்கும் பகுதியிலும் சிறு, சிறு கற்கள் விழுந்தன. இதனால் 2 பெண்கள் உள்பட 3 பேருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் குளித்துக் கொண்டிருந்தவர்களை போலீசார் வெளியேற்றினர். சிறிது நேரத்துக்கு பிறகு மீண்டும் குளிக்க அனுமதித்தனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தார்கள்.
Related Tags :
Next Story