புதுச்சேரி சட்டசபை 26-ந்தேதி கூடுகிறது; கவர்னர் கிரண்பெடி உரையாற்றுகிறார்


புதுச்சேரி சட்டசபை 26-ந்தேதி கூடுகிறது; கவர்னர் கிரண்பெடி உரையாற்றுகிறார்
x
தினத்தந்தி 23 Aug 2019 11:15 PM GMT (Updated: 23 Aug 2019 7:20 PM GMT)

புதுவை சட்டசபை வருகிற 26-ந்தேதி கூடுகிறது. அன்றைய கூட்டத்தில் கவர்னர் கிரண்பெடி உரையாற்றுகிறார்.

புதுச்சேரி,

புதுவை மாநில பட்ஜெட்டை இறுதி செய்வதற்காக கவர்னர் கிரண்பெடி தலைமையில் மாநில திட்டக்குழு கூட்டம் கடந்த மாதம் நடந்தது. இந்த கூட்டத்தில் புதுவை மாநிலத்தின் பட்ஜெட் ரூ.8 ஆயிரத்து 425 கோடி என்று இறுதி செய்யப்பட்டது.

புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் பட்ஜெட்டிற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறுவது அவசியம். இதைத்தொடர்ந்து பட்ஜெட் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதைத்தொடர்ந்து புதுவை சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 26-ந்தேதி கூடுகிறது. இதை சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், ‘புதுவை சட்டசபை வருகிற 26-ந்தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை மண்டபத்தில் மீண்டும் கூட்டப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டம் இது என்பதால் அன்றைய தினம் கவர்னர் கிரண்பெடி உரையாற்றுகிறார். தொடர்ந்து 28-ந்தேதி முதல்-அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்ய உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

ஏனெனில் புதுவை சபாநாயகர் மீது எதிர்க்கட்சி தலைவரான ரங்கசாமி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்துள்ளார். அதை இந்த கூட்டத்தொடரில் வலியுறுத்தினால் விவாதம் நடத்தி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு சூழல் வந்தால் குதிரை பேரம் நடக்கும் வாய்ப்பும் உள்ளது.

மேலும் தற்போது துணை சபாநாயகர் பதவி இடமும் காலியாக உள்ளது. அந்த பதவியை நிரப்பவும் இந்த கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிடப்படும். ஏற்கனவே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான தீப்பாய்ந்தான், விஜயவேணி ஆகியோர் தங்களை எதிர் அணியில் சேர பேரம் பேசியதாக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜெ.ஜெயபால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் ஆகியோர் மீது புகார் கொடுத்துள்ளனர்.

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வலியுறுத்தப்பட்டால் எதிர்க்கட்சி வரிசையில் உள்ள இவர்கள் 2 பேர் மீதும் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போதே நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது. இதனால் புதுச்சேரி அரசியல் உச்சகட்ட பர பரப்பை எட்டியுள்ளது.

Next Story