தூத்துக்குடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு; 114 விடுதிகளில் சோதனை கடல் பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து


தூத்துக்குடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு; 114 விடுதிகளில் சோதனை கடல் பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து
x
தினத்தந்தி 24 Aug 2019 4:00 AM IST (Updated: 24 Aug 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு, பகலாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடல் பகுதியிலும் பாதுகாப்பு படை போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு, பகலாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடல் பகுதியிலும் பாதுகாப்பு படை போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.

எச்சரிக்கை

இலங்கையில் இருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்துக்குள் நுழைந்து இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்து உள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் சுற்றித்திரிந்தால் உடனடியாக அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்துக்குள் வரும் சாலைகளில் உள்ள 6 சோதனைச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பணியமர்த்தப்பட்டு இரவு பகலாக வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கண்காணிப்பு

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக திருச்செந்தூர் பகுதியில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

தருவைகுளம் கடலோர பாதுகாப்புப்படை போலீசார் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ் தலைமையில், திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி பகுதியில் கடல் வழியாக யாரும் ஊடுருவாமல் தடுக்கும் வகையில் தீவிரமாக ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

விடுதிகளில் சோதனை

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன் கூறியதாவது:- மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாரும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். திருச்செந்தூரில் இரவு பகலாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரத்திலும் கண்காணிக்கும் வகையிலான பைனாகுலர் மூலமும் கண்காணிக்கப்படுகிறது. இதற்காக ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள ஓட்டல்கள், விடுதிகளில் சோதனை நடத்தி வருகிறோம். சந்தேகப்படும்படியாக யாரேனும் தங்கி உள்ளார்களா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இதுவரை 114 விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதுவரை சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் இல்லை. அதே போன்று வாகன சோதனையும் தீவிரமாக நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story