பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி, மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை


பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி, மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை
x
தினத்தந்தி 24 Aug 2019 4:15 AM IST (Updated: 24 Aug 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக வந்த தகவலையடுத்து கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

கடலூர்,

இலங்கை வழியாக தமிழ்நாட்டுக்குள் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஸ்கர்-இ- தொய்பா பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவி உள்ளதாகவும், அவர்கள் தமிழகத்தில் மிகப்பெரிய நாசவேலைக்கு சதி செய்துள்ளதாகவும் மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி கடலூர் மாவட்டத்தில் கியூ பிரிவு போலீசார் கடலோர பகுதியான நல்லவாடு முதல் எம்.ஜி.ஆர். திட்டு பகுதி வரை தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதி முகாம்களில் வசிப்பவர்களின் எண்ணிக்கை சரியாக உள்ளதா? வெளியில் வேலைக்கு சென்றவர்கள் முகாம்களுக்கு மீண்டும் வந்துள்ளார்களா? என்றும் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இது தவிர விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் தலைமையிலான போலீசார், பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனை செய்தனர். மேலும் ரெயில் நிலையத்தில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, விடிய, விடிய ரோந்து சென்று வாகன சோதனை நடத்தி வருகின்றனர். தங்கும் விடுதிகளில் சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கி உள்ளார்களா? என்றும் கண்காணித்து வருகின்றனர். முக்கிய வழிபாட்டு தலங்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுவிலக்கு சோதனைச்சாவடி உள்பட மொத்தம் 13 சோதனைச்சாவடிகளிலும் போலீசார் அனைத்து வாகனங்களையும் வழிமறித்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில், நெல்லிக்குப்பம் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு உடந்தையாக இருந்ததாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் இந்த பகுதிகளில் வெளி ஆட்கள் யாரேனும் சுற்றித்திரிகிறார்களா? என்று கியூ பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

இதேபோல் ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளையும் ரெயில்வே போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story