பாளையங்கோட்டை இலந்தைகுளம் தூர்வாரும் பணி கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்


பாளையங்கோட்டை இலந்தைகுளம் தூர்வாரும் பணி கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 Aug 2019 4:00 AM IST (Updated: 24 Aug 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை இலந்தைகுளம் தூர்வாரும் பணியை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

நெல்லை, 

பாளையங்கோட்டை இலந்தைகுளம் தூர்வாரும் பணியை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

குடிமராமத்து பணி

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியான பாளையங்கோட்டையில் இலந்தைகுளம் உள்ளது. இந்த குளத்தை தூர்வாரி இங்கு பூங்கா அமைக்க வேண்டும் என்று மாநகராட்சியில் தீர்மானம் போடப்பட்டது. அதன் பிறகு அங்கு எந்த பணியும் நடைபெறவில்லை. குளம் முழுவதும் முட்செடிகளும், புதருமாக மண்டி கிடக்கிறது. இந்த நிலையில் இந்த குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்த சில அமைப்பினர் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று குளம் தூர்வாரும் பணியை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்து பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் நெல்லை மாநகர பகுதியில் மட்டும் ரூ.3 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணியில் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை மூலம் பதிவு பெற்ற பாசன சங்கங்கள், நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள், பாசனதாரர்கள் ஆகியோர்கள் மூலமாக செயல்படுத்திட அரசு உரிய வழிமுறைகளை வகுத்துள்ளது. இதனால் இந்த திட்டமானது அந்தப்பகுதி விவசாயிகள் மூலமாக செயல்படுத்தப்படும்.

10 துணை கண்காணிப்பு குழு

இந்த திட்டத்தின் மூலமாக, கால்வாயில் வளர்ந்துள்ள செடிகொடிகள் முட்புதர்களை அகற்றுதல், தூர்வாரி சுத்தம் செய்தல், பழுதடைந்த மடை மற்றும் தடுப்புச்சுவர் பழுது பார்த்தல், குளங்களின் கரைகளை பலப்படுத்துதல், கால்வாயின் குறுக்கே பாலம் கட்டுதல், பழுதடைந்த மடைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகளை கண்காணிக்க மாநகராட்சி பொறியாளர்களைக் கொண்ட 10 துணை கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் பாளையங்கால்வாயில் உள்ள 57 குளங்கள் மற்றும் 162 மடைகள் மூலம் 9 ஆயிரத்து 500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். திருநெல்வேலி கால்வாயின் மூலமாக, 62 மடைகள் மற்றும் 23 குளங்கள் மூலம் 6 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இதனால் மாநகர் பகுதியில் உள்ள கால்வாயை தூர்வாரி சுத்தப்படுத்துவதால், கொசுக்கள் மூலம் பரவும் பல்வேறு நோய்களைத் தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி, மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன், அரசு அலுவலர் ஒன்றியத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் நல்லபெருமான், சுடலைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story