மாவட்டம் முழுவதும் 20 சதவீத குடிமராமத்து பணிகளே முடிவடைந்த நிலை; மழை காலத்திற்குள் பணிகள் நிறைவடையுமா?


மாவட்டம் முழுவதும் 20 சதவீத குடிமராமத்து பணிகளே முடிவடைந்த நிலை; மழை காலத்திற்குள் பணிகள் நிறைவடையுமா?
x
தினத்தந்தி 24 Aug 2019 3:00 AM IST (Updated: 24 Aug 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் 20 சதவீதமே முடிவடைந்துள்ள நிலையில், மழைகாலத்திற்குள் பணிகள் முழுமையாக முடிவடைய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர்வளத்தை பெருக்கும் வகையில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள அரசு ரூ.499 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை மூலம் ரூ.26 கோடி மதிப்பீட்டில் 65 பொதுப்பணித்துறை கண்மாய்கள் விவசாயிகளின் பங்களிப்போடு குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

இதேபோன்று ஊரக வளர்ச்சித்துறை மூலம் 161 யூனியன் கண்மாய்களும், 906 ஊருணிகளும் மராமத்து செய்யப்பட்டு வருகின்றன.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் 20 சதவீத பணிகளே முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அண்டை மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கு மேல் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகளில் போதிய வேகம் இல்லாத நிலையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளை எச்சரித்துள்ளார்.

மழை காலத்திற்குள் குடிமராமத்து பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டால் தான் கண்மாய்களில் நீரை தேக்கி வைக்க வாய்ப்பு ஏற்படும். இல்லையேல் செய்யப்பட்ட பணிகளும் பலன் தராமல் போய் விடும்.

தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள போதிலும் அதிகாரிகளின் கண்காணிப்பு குறைபாட்டாலும், பல்வேறு வெளிநபர்களின் தலையீட்டாலும் பணிகளில் தடை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் பாலாஜி நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்ட போதிலும் பணிகளில் எதிர்பார்த்த வேகம் ஏற்படாதது ஏன் என்று தெரியவில்லை. இதேநிலை நீடித்தால் மழைக்காலம் தொடங்குவதற்குள் பணிகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

எனவே மாவட்ட நிர்வாகம் குடிமராமத்து பணிகளை மழை காலம் தொடங்கும் முன் முழுமையாக முடிக்க சிறப்பு கண்காணிப்பு குழுக்களை ஏற்படுத்தி பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் குடிமராமத்து பணிகளுக்கு இடையூறு செய்வோர் யாராக இருந்தாலும் அந்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து பணிகள் தடை இல்லாமல் நடைபெறவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

Next Story