சாலையில் சமையல் செய்து சாப்பிட்டு படுத்து தூங்கினர்: திருச்சி படைக்கலன் தொழிற்சாலை ஊழியர்கள் நூதன போராட்டம்
திருச்சி படைக்கலன் தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று 4-வது நாளாக நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் அவர்கள் சமையல் செய்து சாப்பிட்டு படுத்து தூங்கினர்.
பொன்மலைப்பட்டி,
நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 41 படைக்கலன் தொழிற்சாலைகளை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் கடந்த 20-ந் தேதி முதல் ஒரு மாத தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சியிலும் துப்பாக்கி தொழிற்சாலை, எச்.ஏ.பி.பி. தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். படைக்கலன் தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் நேற்றும் நீடித்தது. அவர்கள் நேற்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துப்பாக்கி தொழிற்சாலை முன்பு ஊழியர்களும், அவர்களது குடும்பத்தினரும் நேற்று சாலையில் சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சமைத்ததை சாப்பிட்டு சாலையில் போர்வை விரித்து தலையணை வைத்து படுத்து தூங்கும் நூதன போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தின் போது கோரிக்கைகள் தொடர்பான பதாகைகளை தொழிற்சாலை ஊழியர்கள் கையில் வைத்திருந்தனர்.
இதேபோல தங்களது போராட்டம் வெற்றி பெற தொழிற்சாலை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு நடத்தினர். மேலும் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த யாகத்தில் தொழிற்சாலை ஊழியர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
மேலும் பெண் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல எச்.ஏ.பி.பி. தொழிற்சாலை முன்பு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படைக்கலன் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் தொழிற்சாலையில் உற்பத்தி பணிகள் பாதிப்படைந்துள்ளது.
Related Tags :
Next Story