திருச்சி முக்கொம்புவில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் தற்காலிக தடுப்பணை வலிமை கொண்டது


திருச்சி முக்கொம்புவில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் தற்காலிக தடுப்பணை வலிமை கொண்டது
x
தினத்தந்தி 23 Aug 2019 11:00 PM GMT (Updated: 23 Aug 2019 8:14 PM GMT)

திருச்சி முக்கொம்புவில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டு வரும் தற்காலிக தடுப்பணை வலிமை கொண்டது. 2 லட்சம் கன அடிதண்ணீர் வந்தாலும் தாங்கும் என வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்தார்.

ஜீயபுரம், 

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை வந்தடைந்து, அங்கிருந்து அகண்ட காவிரியாக திருச்சி முக்கொம்புவை அடைகிறது. அங்கிருந்து கல்லணை நோக்கி காவிரி ஆறும், உபரிநீர் வெளியேறும் வகையில் கொள்ளிடம் ஆறும் என 2 ஆக பிரிகின்றன.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மேட்டூர் அணை 2 முறை நிரம்பியதால் தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கும் மேலாக திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டபடி பெருக்கெடுத்து ஓடியது. வினாடிக்கு சுமார் 3 லட்சம் கனஅடி வரை வெள்ளம் வந்ததால் முக்கொம்பு மேலணையில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் உபரிநீரும் அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வந்தது.

தொடர்ச்சியாக தண்ணீர் கொள்ளிடம் தடுப்பணையில் மதகுகளில் பாய்ந்து சென்றதால், நீரின் அழுத்தம் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி இரவு 45 மதகுகளில் 9 மதகுகள் இடிந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கொள்ளிடம் ஆற்றின் கீழ் பகுதியில் ரூ.387 கோடியே 60 லட்சம் மதிப்பில் புதிய தடுப்பணை கட்டப்படும் என்றும், அதற்கு முன்னதாக உடைந்த கொள்ளிடம் ஆற்றின் மதகுகள் இருந்த இடத்தில் ரூ.38 கோடியே 85 லட்சம் மதிப்பில் தற்காலிக தடுப்பணை கட்டப்படும் எனவும் அறிவித்தார்.

கொள்ளிடம் தடுப்பணை உடைந்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் அதே இடத்தில் தற்காலிக தடுப்பணை கட்டும் பணியில் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தற்காலிக தடுப்பணை கட்டப்பட்ட இடத்தில் தேங்கி நிற்கிறது. குறைந்த அளவே தண்ணீர் வரத்து இருப்பதால், விவசாய பாசனத்திற்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு கல்லணை நோக்கி செல்கிறது.

இந்த நிலையில் நேற்று முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தற்காலிக தடுப்பணையையும், அதன் அருகில் நடைபெற்று வரும் புதிய கதவணை பணிகளையும் தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு, பொதுப்பணித்துறை ஆற்றுப்பாசன கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர்கள் ஜெயராமன், சிவகுமார், உதவி பொறியாளர்கள் கார்த்திக், ரஞ்சித்குமார், பிரகாஷ், தடுப்பணை திட்ட அதிகாரி சீனிவாசகன் உள்பட அதிகாரிகளும் சென்றனர்.

பின்னர் அங்கு அதிகாரிகளுடன் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் கலந்தாலோசனை நடத்தினார். காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வந்தால் தற்காலிக தடுப்பணை தாங்கும் சக்தி கொண்டதா? என்றும், புதிய தடுப்பணை கட்டும் பணியின் தீவிரம் குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து குடிமராமத்து பணிகள் குறித்தும், மழை வெள்ள காலங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

அதன் பின்னர் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் சில இடங்களுக்கு நேரில் சென்று 5 குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்தேன். மாவட்டத்தில் 88 குடிமராமத்து பணிகளுக்கு ரூ.12¾ கோடி செய்யப்பட்டுள்ளது. இதுபோல சிறப்பு நிதியின் கீழ் மேம்பாட்டுக்காக 55 பணிகளுக்கு ரூ.4½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் நடந்து வரும் குடிமராமத்து பணிகளை செப்டம்பர் 15-ந் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றில் 9 மதகுகள் உடைந்தன. அந்த இடத்தில் தற்காலிக தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டு விட்டது. வருகிற 28-ந்தேதிக்குள் பணியை முழுமையாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடி தண்ணீர் வரை சேமித்து வைக்க வாய்ப்புள்ளது. அதற்கு மேல் வரும் தண்ணீர் மட்டுமே கொள்ளிடம் ஆற்றில் உபரியாக திறந்து விடப்படும். தற்போதைய நிலையில் 2 லட்சம் கன அடி தண்ணீர் வந்தாலும் கொள்ளிடம் ஆற்றின் தற்காலிக தடுப்பணை தாங்கும் அளவுக்கு வலிமையாக கட்டப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் இடிந்த தடுப்பணையின் கீழ் பகுதியில் ரூ.387 கோடியே 60 லட்சம் மதிப்பில் புதிய தடுப்பணை கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றில் தரைமட்டத்திற்கு கீழ் மொத்தம் 484 தூண்கள் அமைக்கப்பட உள்ளது. அவற்றில் 140 தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன. 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பணையின் மேல் 4.5 மீட்டர் அகலம் விடப்பட்டுள்ளது. இதனால், வழக்கமான போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும்.

கடைமடை வரை தண்ணீர் விடப்படவேண்டும் என்று விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை வரப்பெற்றுள்ளது. அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story