நாகை புதிய கடற்கரையில் மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
நாகை புதிய கடற்கரையில் மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் வேளாங் கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோவில் ஆன்மிக தலங்கள் உள்ளன. இதனால் நாகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். நாகை நகரில் பொழுதுபோக்கு அம்சமாக கலங்கரை விளக்கம் மற்றும் புதிய கடற்கரை மட்டுமே உள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் நாகை கடற்கரை சிதிலமடைந்தது.
இதைத்தொடர்ந்து நாகை புதிய கடற்கரை மீண்டும் புதுபொலிவுடன் சீரமைக்கப்பட்டது. இதில் பாராசூட் பயிற்சி, படகு சவாரி, சிறுவர் விளையாட்டு பூங்கா, நடை பயிற்சி மேடை, கடற்கரை வாலிபால், கால்பந்து என அனைத்து விளையாட்டுக்கள் விளையாடவும், பொதுமக்கள் பொழுது போக்குவதற்கு ஏற்ற வசதிகளும் செய்யப்பட்டன. இந்த புதிய கடற்கரையை நாகை நகராட்சி நிர்வகித்து வருகிறது.
தற்போது புதிய கடற்கரை பொலிவிழந்து காணப்படுகிறது. புதிய கடற்கரையில் இருக்கைகள் உடைந்தும், சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் சிதிலமடைந்தும் காணப்படுகிறது. மேலும், கடற்கரையில் கடந்த சில நாட்களாக அனைத்து மின்விளக்குகளும் எரியாமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
மின்விளக்குகள் எரியாததால் மாலையில் புதிய கடற்கரைக்கு பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாகை புதிய கடற்கரையில் உள்ள மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story