வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்குபவர்கள் அனுமதி பெற வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்
வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற வேண்டும் என கலெக்டர் சுரேஷ்குமார் அறிவுறுத்தி உள்ளார்.
வேளாங்கண்ணி,
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் வேளாங்கண்ணியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-
வேளாங்கண்ணி ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் நெரிசல் இன்றி பஸ்களில் பயணிக்கும் வகையில் பல்வேறு மண்டலங்களில் இருந்து அதிக அளவில் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தற்காலிக வாகனம் நிறுத்தும் இடங்களில் தேவையான அளவு மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. கடற்கரை மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து 24 மணி நேரமும் போலீசார் பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீயணைப்புத்துறையினர் அனைத்து வகையான மீட்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் விழா முடியும் வரை தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அன்னதானம் செய்பவர்கள் உணவு பாதுகாப்பு துறையிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.
சுகாதாரத்்துறை சார்பில் தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைத்து சுழற்சி முறையில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை பணியில் ஈடுபடுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், ரெயில் நிலையங்களில் தேவையான குடிநீர் வசதிகள் வழங்கிடவும், நகரம் முழுவதும் தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கவும், கழிவறைகளில் சுழற்சி முறையில் பணியாளர்களை நியமித்து சுத்தம் செய்யவும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மீன்வளத்துறையின் ரோந்து படகுகள் மூலம் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். நகரில் எந்த இடத்திலும் குப்பைகள் தேங்காத வண்ணம் தொடர்ந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, வேளாங்கண்ணி நகரில் தூய்மையை காத்திடவும், வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் வந்து செல்லவும் பொதுமக்கள், வர்த்தகர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் நாகை உதவி கலெக்டர் கமல்கிஷோர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குர் தியாகராஜன், வேளாங்கண்ணி பேராலய அதிபர்் பிரபாகர், தாசில்தார் கபிலன், பேரூராட்சி செயல் அலுவலர் மோகனசுந்தரம் உள்பட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story