தினமும் மதுகுடித்துவிட்டு வரும் கணவரை மிரட்டுவதற்காக தூக்குப்போட்ட பெண், கழுத்து இறுகி சாவு - மயிலாடுதுறை அருகே பரிதாபம்


தினமும் மதுகுடித்துவிட்டு வரும் கணவரை மிரட்டுவதற்காக தூக்குப்போட்ட பெண், கழுத்து இறுகி சாவு - மயிலாடுதுறை அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 24 Aug 2019 3:30 AM IST (Updated: 24 Aug 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே தினமும் மதுகுடித்துவிட்டு வரும் கணவரை மிரட்டுவதற்காக தூக்குப்போட்ட பெண், கழுத்து இறுகி பரிதாபமாக இறந்தார்.

குத்தாலம், 

மயிலாடுதுறை அருகே மங்கநல்லூர் ரெயில்வே ஸ்டேஷன் சாலையை சேர்ந்தவர் ஜமால்மைதீன். இவருடைய மனைவி ஜெசிமா (வயது 50). ஜமால் மைதீன் தினமும் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். இதனால் ஜெசிமா, தனது கணவர் ஜமால் மைதீனை மதுகுடிக்கக்கூடாது என்று கண்டித்துள்ளார். ஆனாலும் அவர், தொடர்ந்து மதுகுடித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெசிமா தனது கணவரை மிரட்டுவதற்காக வீட்டில் கயிற்றால் தூக்குப்போட்டுள்ளார். அப்போது கயிறு கழுத்தை இறுக்கி உள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ஜெசிமாவை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெசிமா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதனையடுத்து நேற்று ஜெசிமாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story