வேடசந்தூர் அருகே, தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் தொழிலாளி கைது - செல்போன் மூலம் துப்பு துலங்கியது


வேடசந்தூர் அருகே, தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் தொழிலாளி கைது - செல்போன் மூலம் துப்பு துலங்கியது
x
தினத்தந்தி 24 Aug 2019 4:15 AM IST (Updated: 24 Aug 2019 3:01 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே உள்ள கெண்டையகவுண்டனூரைச் சேர்ந்த மொராஜ் (வயது 45). இவருக்கு பூங்கோடி, லட்சுமி ஆகிய இரு மனைவிகளும், சசிகலா (18), சர்மிளா (14), வடிவேல்ராஜா(10) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர். மொராஜ் தி.மு.க. கிளை பிரதிநிதியாக இருந்து வந்தார். அவருக்கு சொந்தமாக 2 மினி லாரிகள், ஒரு வேன் உள்ளன.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி இரவு அதே பகுதியில் உறவினருக்கு சொந்தமான ரைஸ் மில் வளாகத்தில் மொராஜ் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரை மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த கொலை சம்பவத்தில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வந்தனர்.

இந்நிலையில் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில் மொராஜின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்தனர்.

அவருடைய செல்போன் எண்ணுக்கு கடைசியாக அதே ஊரை சேர்ந்த செல்வராணி என்பவரின் செல்போன் எண்ணில் இருந்து போன் செய்யப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து செல்வராணியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பக்கத்து வீட்டை சேர்ந்த கல் உடைக்கும் கூலித்தொழிலாளி சவடமுத்து என்ற குட்ட சவடமுத்துவின் மனைவி கணேஷ்மணி தன்னிடம் செல்போன் வாங்கி பேசியதாக கூறினார். இதனையடுத்து கணேஷ்மணியிடமும், சவடமுத்துவிடமும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர். மொக்கராஜை கொலை செய்ததை சவடமுத்து ஒப்புக்கொண்டார்.

மேலும் விசாரணையில், கணேஷ்மணிக்கும் மொராஜூக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. இது சவடமுத்துவுக்கு தெரியவந்தது. அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் தொடர்ந்து மொராஜூக்கும், கணேஷ்மணிக்கும் தொடர்பு இருந்து வந்தது. இதனால் ஆத்திரமடைந்த சவடமுத்து கல் உடைக்கும் சுத்தியலால் மொராஜை அடித்து கொலை செய்ததாக தெரிகிறது. பின்னர் அந்த சுத்தியலை சுத்தம் செய்து தன் வீட்டில் வைத்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து சவடமுத்துவை போலீசார் கைது செய்தனர். அவர் கொலைக்கு பயன்படுத்திய சுத்தியலையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வேடசந்தூர் கோர்ட்டில் சவடமுத்துவை போலீசார் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 6 மாதங்களுக்கு பிறகு கூலித்தொழிலாளியை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story