தேனியில், தீக்குளித்த புதுமாப்பிள்ளை நடுரோட்டில் ஓடியதால் பரபரப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
தேனியில் தீக்குளித்த புதுமாப்பிள்ளை நடுரோட்டில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தேனி,
தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டி சுப்பிரமணியசிவா தெருவை சேர்ந்த முத்தையா மகன் கிருஷ்ணன் (வயது 32). இவர் தேனி நகர் கம்பம் சாலையில் உள்ள ஒரு பேட்டரி விற்பனை கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியை சேர்ந்த பிரீத்தி என்ற பெண்ணுக்கும் கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், பிரீத்தி தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில், நேற்று காலையில் கிருஷ்ணன் ஒரு மோட்டார் சைக்கிளில் பழனிசெட்டிபட்டியில் இருந்து தேனிக்கு வந்தார். தேனி புதிய பஸ் நிலையம் அருகில் புறவழிச்சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் அருகில் இருந்த கரட்டுப் பகுதிக்கு நடந்து சென்று அங்கு தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் அவர் வலிதாங்காமல் சாலைக்கு ஓடி வந்தார். நடுரோட்டில் உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் அவர் ஓடி வந்ததை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே சிலர் ஓடிச்சென்று அவர் உடலில் எரிந்த தீயை அணைத்தனர்.
மேலும் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. அதில் அவரை ஏற்றி, சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். உடலில் 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணன் தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கிருஷ்ணன் திருமணத்தில் விருப்பம் இன்றி இருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணமான மறுநாளே அவர் வீட்டை விட்டு சென்று விட்டார். பின்னர் உறவினர்கள் சிலர் அவரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இருப்பினும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவருடைய மனைவி தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். திருமண வாழ்க்கை பிடிக்காத நிலையில் அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்’ என்றார்.
Related Tags :
Next Story