மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை
நவிமும்பையில் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, ரெயில் முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை,
நவிமும்பையில் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, ரெயில் முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரத்த வெள்ளத்தில் மனைவி
நவிமும்பை உரன், ஜசாய் பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் வசித்து வந்தவர் ராஜூ குமார்(வயது31). இவரது மனைவி ராய். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று ராஜூ குமாரின் வீட்டில் இருந்து குழந்தைகளின் சத்தம்கேட்டது. மேலும் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டுக்குள் ராஜூ குமாரின் மனைவி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது குழந்தைகள் தாய் இறந்து கிடப்பது கூட தெரியாமல் விளையாடி கொண்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
கணவர் தற்கொலை
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் சம்பவ இடத்தில் இருந்து சுமார் 1½ கி.மீ. தொலைவில் உள்ள தண்டவாளத்தில் ஆண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்ட தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, அது ராஜூ குமார் என்பது தெரியவந்தது.
சம்பவத்தன்று ராஜூ குமார் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, குழந்தைகளை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு சென்று உள்ளார். பின்னர் அவர் வீட்டருகே உள்ள தண்டவாளத்தில் சரக்கு ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
தாய் உடலுடன் குழந்தைகள்
இதுகுறித்து உரன் போலீஸ்நிலைய உதவி இன்ஸ்பெக்டர் அதுல் அகிர் கூறியதாவது:-
“கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலுடன் 2 குழந்தைகளும் 24 மணி நேரத்திற்கு மேலும் உணவு, தண்ணீர் இல்லாமல் இருந்து உள்ளது. குழந்தைகள் அழாமல், சத்தம் போடாமல் இருந்தது ஆச்சரியமாக உள்ளது. பூட்டிய வீட்டுக்குள் சத்தம் கேட்டதை அடுத்து அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பார்த்து எங்களுக்கு தகவல் கொடுத்தனர்.
ராஜூகுமார் மனைவியை கொலை செய்துவிட்டு ஏன் தற்கொலை செய்தார் என்பது தெரியவில்லை. அதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர்களின் 2 குழந்தைகளையும் கார்கரில் உள்ள காப்பகத்தில் சேர்த்து உள்ளோம்”.
இவ்வாறு அவர் கூறினார்.
2 பெண் குழந்தைகளை தவிக்கவிட்டு மனைவியை கொலை செய்து கணவர் தற்கொலை செய்து கொண்டது உரன் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story