அறந்தாங்கி அருகே, போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
அறந்தாங்கி அருகே போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆயிங்குடி கிராமத்தில் அய்யனார் கருத்தப்பெரியான் கோவில் உள்ளது. இக்கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு சமுதாயத்தினர் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இக்கோவிலில் கடந்த 21-ந் தேதி வருடாபிஷேகம் நடைபெற்றது. அப்போது ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் வழங்கப்பட்ட அன்னதானத்தை சாப்பிட்டுள்ளனர்.
அன்னதானத்தில் சாப்பிட்டது தவறு, கோவிலுக்கு சென்றது தவறு எனக்கூறி அதே சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அதே சமுதாயத்தை சேர்ந்த சிலர், ஆறுமுகம், கருப்பன், சங்கரன் ஆகிய 3 பேரையும் தாக்கினராம். இதில் காயமடைந்த 3 பேரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தங்களை தாக்கியதாக சிலர் அறந்தாங்கி போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் நேற்று காலையில் அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஆயிங்குடி பகுதியை சேர்ந்த ராமு, நாராயணன், ராஜதுரை, முத்துகுமார், உமாசங்கர் ஆகியோரை விசாரணைக்காக அறந்தாங்கி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
இதையடுத்து ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தாக்கி கொண்டதற்கு மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றதை கண்டித்து நேற்று அறந்தாங்கி-பேராவூரணி சாலையில் ஆயிங்குடி அருகே, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கோட்டாட்சியர் குணசேகர், தாசில்தார் சூரியபிரபு, துணை சூப்பிரண்டு கோகிலா, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இந்த சம்பவத்தால் அறந்தாங்கி பேராவூரணி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் குணசேகர் தலைமையில் 2 சமுதாயத்தினரையும் அழைத்து சமாதான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மோதலில் ஈடுபட்ட ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட 5 பேரையும் அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்படாமல் இருப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story