அரசு வேலைக்காக யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் - சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் அமைச்சர் அறிவுரை


அரசு வேலைக்காக யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் - சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் அமைச்சர் அறிவுரை
x
தினத்தந்தி 23 Aug 2019 10:45 PM GMT (Updated: 24 Aug 2019 12:11 AM GMT)

அரசு வேலைக்காக யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவுரை வழங்கினார்.

திண்டுக்கல், 

திண்டுக்கல்லை அடுத்த செட்டிநாயக்கன்பட்டி அருகே உள்ள நந்தனார்புரத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பொதுமக்களின் குறைகளை அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று கேட்டறிந்து அது தொடர்பான மனுக்களை பெற்று 30 நாட்களுக்குள் அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையிலேயே தமிழகம் முழுவதும் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி நந்தனார்புரத்தில் இன்று (அதாவது நேற்று) சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளான வீட்டுமனை பட்டா, உதவித்தொகை, பட்டா மாறுதல், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளிக்கலாம். அந்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.

அதேபோல் வருகிற 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளுக்கு அனைத்து துறை அதிகாரிகளும் நேரடியாக சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க உள்ளனர். தற்போது ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டு இருக்கும் நந்தனார்புரம் விரைவில் மாநகராட்சியோடு இணைக்கப்படும். அரசு வேலைக்காக யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றாலே வேலை வாய்ப்பு உங்கள் வீடு தேடி வரும்.

அதேபோல் வனத்துறையிலும் பல்வேறு காலி பணியிடங்கள் அவ்வப்போது அறிவிக்கப்படுகின்றன. அதற்கும் இணையதளம் மூலம் விண்ணப்பித்து தேர்வு எழுத வேண்டும். தேர்வில் வெற்றி பெற்றால் நேர்காணலுக்கான அழைப்பு அவர்களுக்கு தானாகவே வந்துவிடும். இதற்காக என்னுடைய உதவியை நாடி யாரும் வரவேண்டாம். இவ்வாறு அவர் கூறினார். அதையடுத்து 26 பயனாளிகளுக்கு ரூ.54 லட்சத்து 60 ஆயிரத்தில் பசுமை வீடுகள், 17 பேருக்கு முதியோர் உதவித்தொகை என்பன உள்பட மொத்தம் 83 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 34 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, எம்.எல்.ஏ.க்கள் பரமசிவம், தேன்மொழி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஜெயசீலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அதையடுத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் அமர்ந்திருக்கும் இடத்துக்கே சென்று கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டார். அப்போது கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊருவியதாக வந்த தகவலையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதா? திண்டுக்கல்லில் பாதுகாப்புக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன? என்று அமைச்சரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, மக்கள் பிரச்சினை குறித்து என்னிடம் கேள்வி எழுப்புங்கள், மற்ற துறை அதிகாரிகளிடம் கேட்க வேண்டிய கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம் என்று கூறிவிட்டு அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Next Story