பல்லடத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை– ரூ.5¾ லட்சம் திருட்டு; மர்ம ஆசாமிகள் கைவரிசை


பல்லடத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை– ரூ.5¾ லட்சம் திருட்டு; மர்ம ஆசாமிகள் கைவரிசை
x
தினத்தந்தி 24 Aug 2019 10:45 PM GMT (Updated: 24 Aug 2019 12:56 PM GMT)

பல்லடத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை மற்றும் ரூ.5¾ லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்லடம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் லட்சுமி மில்ஸ் எஸ்.ஏ.பி. நகரில் வசிப்பவர் காளியப்பன் (வயது 66). ஓய்வு பெற்ற மில் தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தாமணி (62) இவர்களுக்கு பார்த்திபன் என்ற மகன் உள்ளார். இவர் திருமணமாகி பல்லடம் அண்ணா நகரில் வசித்து வருகிறார். காளியப்பன் தற்போது அருள்புரத்தில் உள்ள ஒரு மில்லில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 17–ந்தேதி பல்லடம் தெற்குபாளையம் அருகே காளியப்பன் மோட்டார்சைக்கிளில் சென்ற போது ஒரு பஸ் முந்திச்சென்றது. அப்போது எதிரே 3 பேருடன் வந்த மோட்டார்சைக்கிள் காளியப்பன் வந்த மோட்டார்சைக்கிளில் மோதியது. இதில் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த காளியப்பன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று முன்தினம் மாலை ஆஸ்பத்திரியில் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்தபோது. வீட்டின் காம்பவுண்டு சுவர் பூட்டை திறந்து கொண்டு சென்றபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டிற்குள் இருந்த 4 பீரோ உடைக்கப்பட்டு அவற்றில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த நெக்லஸ், தங்கசங்கிலி, மோதிரம், 1 பவுன் காசு உள்பட 8 பவுன் நகைகளும், கைக்கெடிகாரம் மற்றும் ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் ஆகியவை திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. மர்ம ஆசாமிகள் வீட்டின் காம்பவுண்டு சுவரில் ஏறிக்குதித்து உள்ளே புகுந்து வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைந்து வீட்டிற்குள் புகுந்து நகை, பணத்தை திருடிச்சென்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து காளியப்பனின் மனைவி சாந்தாமணி பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த பல்லடம் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் திருட்டு நடந்த வீட்டிற்கு வந்து திருடர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் திருப்பூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்க வைக்கப்பட்டது. மோப்ப நாய் வீட்டில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரம் ஓடி ரோட்டை அடைந்தது. மீண்டும் வீட்டிற்கு ஓடி வந்தது. இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

எஸ்.ஏ.பி.நகரில் அதிக வீடுகள் உள்ள இடத்தில் மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் நகை, பணம் திருட்டு போய் இருப்பது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும்,பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் அப்பகுதியில் உள்ள ஒரு ஹார்டுவேர்ஸ் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் 2 முறை திருட்டு போய் இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story