ரூ.6½ கோடியில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்


ரூ.6½ கோடியில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்
x
தினத்தந்தி 25 Aug 2019 4:00 AM IST (Updated: 24 Aug 2019 10:40 PM IST)
t-max-icont-min-icon

ரூ.6½ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு குன்னூர் பத்ரகாளி அம்மன் திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு அடையாள அட்டைகள் என நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.

பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் நடந்த விழாக்களில் கலந்து கொண்டு அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாக்களில் மொத்தம் 2,039 பேருக்கு ரூ.6 கோடியே 66 லட்சத்து 6 ஆயிரத்து 401 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். விழாவில் அமைச்சர் கூறியதாவது:-

மக்கள் நலனில் அக்கறை கொண்டு எண்ணற்ற பல்வேறு நலத்திட்டங்களை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தினார். அரசை தேடி மக்கள் சென்ற நிலையை மாற்றி, மக்களைத் தேடி அரசு நலத்திட்ட உதவிகள் என்ற நிலையை உருவாக்கினார். ஏழைகளே இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் எண்ணங்களை செயல்படுத்தும் விதமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவச பட்டா வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், நீர் மற்றும் கண்மாய் புறம்போக்கு தவிர மற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் பல ஆண்டுகளாக வசித்தும், பட்டா இல்லாத ஏழை எளிய மக்கள் பட்டா வேண்டி விண்ணப்பித்தால் பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நீர் மற்றும் கண்மாய் புறம் போக்கில் வீடு கட்டியவர்களுக்கு குடிசை மாற்றுவாரியத்தில் மாற்று வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தினை தொடங்கி வைத்து, பொது மக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெறப்பட்டு, அதை செப்டம்பர் மாதத்திற்குள் நிவர்த்தி செய்ய உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள், நகராட்சிகள் என அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சாலை அமைக்கப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் சாலை வசதிகள் மேற்கொள்ள விண்ணப்பம் கொடுக்கும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்பட்டு நிறைவேற்றப்படும். மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் 161 சிறு பாசன கண்மாய்கள் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலும், 906 ஊருணி மற்றும் குளங்கள் தலா ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலும் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் சந்திரபிரபா, ராஜவர்மன், மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) சங்கர் எஸ்.நாராயணன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியர்கள் காளிமுத்து(சாத்தூர்), தினகரன்(சிவகாசி), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜெகதீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story