சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி காங்கிரசுடன் கூட்டணி முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேட்டி


சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி காங்கிரசுடன் கூட்டணி முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேட்டி
x
தினத்தந்தி 25 Aug 2019 4:00 AM IST (Updated: 24 Aug 2019 10:52 PM IST)
t-max-icont-min-icon

சித்தராமையாவின் கருத்துக்கு காலம் தான் பதில் சொல்லும் என்றும், சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி காங்கிரசுடன் கூட்டணி என்றும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா தெரிவித்தார்.

ஹாசன்,

சித்தராமையாவின் கருத்துக்கு காலம் தான் பதில் சொல்லும் என்றும், சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி காங்கிரசுடன் கூட்டணி என்றும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா தெரிவித்தார்.

தேவேகவுடா சாமி தரிசனம்

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா நேற்று ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தாலுகா மாவினகெரே பகுதியில் உள்ள ரங்கநாதா கோவில், லட்சுமி நரசிம்மசாமி கோவில்களில் சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார். அவருடன் மகனும், முன்னாள் மந்திரியுமான எச்.டி.ரேவண்ணா, பேரனும், ரேவண்ணாவின் மகனுமான சூரஜ் ரேவண்ணா ஆகியோரும் இருந்தனர்.

இதையடுத்து ஒலேநரசிப்புராவில் உள்ள தனது வீட்டில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காலம் பதில் சொல்லும்

சித்தராமையாவின் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். அவருடைய கருத்துக்கு காலம் தான் பதில் அளிக்கும். அடுத்து வரும் தேர்தலுக்கு ஜனதா தளம்(எஸ்) கட்சியை அடி மட்டத்தில் இருந்து வலுப்படுத்துவதே என்னுடைய குறிக்கோள். மாநில கட்சியை வலுப்படுத்தி பெரிய கட்சியாக மாற்றுவது சுலபமானது அல்ல. அந்த விஷயத்தில் நான் அதிகமான கஷ்டங்களை அனுபவித்து உள்ளேன். ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எச்.கே.குமாரசாமி 5 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கூட்டணி ஆட்சியில் அவருக்கு மந்திரி பதவி கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது.

கர்நாடகத்தில் எடியூரப்பா ஆட்சி இன்னும் 3 ஆண்டுகள் நீடிக்கலாம். எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசின் நலத்திட்டங்களுக்கு எப்போதும் எங்களின் ஆதரவு இருக்கும். மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பது முக்கியம். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவில்லை என்றால் மாநில அரசுக்கு எதிராக ஜனதா தளம்(எஸ்) கட்சி போராட்டம் நடத்தும்.

மக்கள் கைவிடமாட்டார்கள்

மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சியில் உள்ளது. இதனால் மாநில அரசு நல்ல வளர்ச்சி பணிகளை செய்யும் என்று நம்புகிறேன். அதற்கான வாய்ப்புகளும் உள்ளது. மத்தியில் இருந்து மாநிலத்துக்கு கூடுதல் நிதி கிடைக்கும். மாநில அரசு, விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தேசிய அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. மாநிலத்தில் இருந்து ஜனதா தளம்(எஸ்) கட்சியை பலப்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்வேன்.

இடைத்தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதனை எதிர்கொள்ள ஜனதா தளம்(எஸ்) கட்சி தயாராக உள்ளது. மாநில மக்கள் எப்போதும் என்னையும், ஜனதா தளம்(எஸ்) கட்சியையும் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

சோனியா காந்தி கூறினால்...

காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் கூட்டணி ஏற்படுமா என்பது குறித்து கேட்கிறீர்கள். காங்கிரஸ் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோனியா காந்தி, பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்து மாநில கட்சிகளையும் ஒருங்கிணைத்து செல்வேன் என்று கூறியுள்ளார். சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கப்படும்.

காஷ்மீரில் பல தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இது வளர்ச்சிக்கான பாதை அல்ல. காஷ்மீர் வளர்ச்சி அடைய என்ன நடவடிக்கையோ அதனை மேற்கொள்ள வேண்டும். நான் பிரதமராக இருந்தபோது காஷ்மீரில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story