பெங்களூரு அருகே கார் கவிழ்ந்தது: பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர், 3 நண்பர்களுடன் பலி 5 பேர் படுகாயம்
பெங்களூரு அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர், 3 நண்பர்கள் பலியானார்கள். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பெங்களூரு,
பெங்களூரு அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர், 3 நண்பர்கள் பலியானார்கள். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கார் கவிழ்ந்தது
பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தாலுகா ஹந்தரஹள்ளியில் அருகே நேற்று அதிகாலையில் 3.30 மணிக்கு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது.
இதில் காரில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். இதுகுறித்து அறிந்தவுடன் சென்னராயப்பட்டணா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
4 பேர் சாவு
அப்போது காரில் இருந்த 4 பேர் உடல் நசுங்கி செத்ததும், 5 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடுவதும் தெரியவந்தது. இதையடுத்து படுகாயமடைந்த 5 பேரை மீட்ட போலீசார் அருகே உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேவனஹள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்தவர்கள் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகா நக்கலபள்ளியை சேர்ந்த மல்லிகார்ஜுன ரெட்டி (வயது 26), சாகவேலு கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (வயது 25), மரவபள்ளியை சேர்ந்த அசோக் ரெட்டி (24), சிட்டலகட்டாவை சேர்ந்த சுந்தர் (24) என்பது தெரியவந்தது. மேலும் பாகேபள்ளி தாலுகா நக்கலபள்ளி கிராமத்தை சேர்ந்த கிரீஷ் (23), ரமேஷ் (26), மஞ்சுநாத் (26), அசோக் (26), ரகுநாத் ரெட்டி (22) ஆகிய 5 பேரும் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.
பிறந்தநாள் கொண்டாட்டம்
இதில் இறந்துபோன மல்லிகார்ஜுன ரெட்டிக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இதையொட்டி பெங்களூரு அவலஹள்ளியில் உள்ள வாடகை வீட்டில் வைத்து மல்லிகார்ஜுன ரெட்டி தனது நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.
அதன்பிறகு அவர்கள் சூரிய உதயம் பார்க்க நந்தி மலைக்கு காரில் புறப்பட்டு சென்றனர். காரை அசோக் ரெட்டி ஓட்டியபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.
பெரும் சோகம்
இதுகுறித்து சென்னராயப்பட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கார் கவிழ்ந்த விபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் உள்பட 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story