பெங்களூருவில் ரசாயன விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டாம் பொதுமக்களுக்கு மேயர் வேண்டுகோள்


பெங்களூருவில் ரசாயன விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டாம் பொதுமக்களுக்கு மேயர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 25 Aug 2019 3:30 AM IST (Updated: 24 Aug 2019 11:35 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தையொட்டி ரசாயனத்தால் ஆன விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களுக்கு மேயர் கங்காம்பிகே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூரு, 

பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தையொட்டி ரசாயனத்தால் ஆன விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களுக்கு மேயர் கங்காம்பிகே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரசாயன விநாயகர் சிலைகள்

வருகிற 2-ந்தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் வீடுகள் மற்றும் முக்கிய வீதிகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, பின்னர் அதனை நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்வது வழக்கம். ஆனால் சமீபகாலமாக சிலர் ரசாயனத்தால் ஆன விநாயகர் சிலைகளை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. எனவே ரசாயனத்தால் ஆன விநாயகர் சிலைகளை பயன்படுத்த கூடாது என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும் பெங்களூருவில் ரசாயனத்தால் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. அந்த விநாயகர் சிலைகளை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பறிமுதல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகையொட்டி ரசாயனம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்த கூடாது என்று பெங்களூரு மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று பெங்களூரு ஜெயநகரில் உள்ள கித்தூர் ராணிசென்னம்மா மைதானத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மேயர் வேண்டுகோள்

அதாவது, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு களிமண்ணில் விநாயகர் சிலை தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. அத்துடன் ரசாயனம் பூசப்பட்ட சிலைகளை வாங்கி பூஜை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெங்களூரு மாநகராட்சி மேயர் கங்காம்பிகே கலந்து கொண்டார். பிறகு அவர் பேசும்போது கூறியதாவது:-

விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் பொதுமக்கள் அனைவரும் மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்ய வேண்டும். ரசாயனம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால் மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலை ஏரி தண்ணீரில் எளிதில் கரையும். ஆனால் ரசாயன சிலைகள் ஏரிகளில் கரையாமல் இருப்பதோடு, தண்ணீரையும் மாசு அடைய செய்கிறது. எனவே நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் அனைவரும் மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் ஜெயநகர் தொகுதி எம்.எல்.ஏ. சவுமியாரெட்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story