பா.ஜனதா ஆட்சியை முன்னெடுத்து செல்ல 3 பேருக்கு துணை முதல்-மந்திரி பதவி எடியூரப்பாவுக்கு கட்சி மேலிடம் உத்தரவு


பா.ஜனதா ஆட்சியை முன்னெடுத்து செல்ல 3 பேருக்கு துணை முதல்-மந்திரி பதவி எடியூரப்பாவுக்கு கட்சி மேலிடம் உத்தரவு
x
தினத்தந்தி 25 Aug 2019 4:00 AM IST (Updated: 24 Aug 2019 11:44 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா ஆட்சியை முன்னெடுத்து செல்ல 3 பேருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்க எடியூரப்பாவுக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு, 

பா.ஜனதா ஆட்சியை முன்னெடுத்து செல்ல 3 பேருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்க எடியூரப்பாவுக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

துறைகள் ஒதுக்க காலதாமதம்

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. நீண்ட இழுபறிக்கு பின்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. சுயேச்சை எம்.எல்.ஏ. நாகேஷ் உள்பட 17 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றுக் கொண்டனர். மீதமுள்ள மந்திரி பதவிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்க முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்துள்ளார்.

ஆனால் மந்திரி பதவி கிடைக்காததால் உமேஷ் கட்டி, ரேணுகாச்சார்யா, பாலசந்திர ஜார்கிகோளி உள்பட 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி எடியூரப்பா மீது அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அதே நேரத்தில் மந்திரி பதவி ஏற்றுள்ள 17 பேருக்கு இன்னும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது. முக்கிய துறைகளுக்கு மந்திரிகள் இடையே போட்டி உருவாகி இருப்பதால், இலாகாக்களை ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

3 துணை முதல்-மந்திரிகள்

இதையடுத்து, மந்திரிகளுக்கு துறைகள் ஒதுக்கீடு, மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளவர்களை சமாதானப்படுத்துவது குறித்து டெல்லியில் நேற்று முன்தினம் பா.ஜனதா தேசிய தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷாவை முதல்-மந்திரி எடியூரப்பா சந்தித்து பேசினார். அப்போது 17 மந்திரிகளுக்கும் எந்த துறைகளை வழங்கலாம் என்பது குறித்து எடியூரப்பாவுக்கு சில அறிவுரைகளை அமித்ஷா வழங்கி இருப்பதாக தெரிகிறது.

அதே நேரத்தில் மாநிலத்தில் ஆட்சியை எந்த விதமான பிரச்சினைகளும் இன்றி முன்னெடுத்து செல்வதற்கு வசதியாக 3 பேருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கும்படியும் எடியூரப்பாவுக்கு கட்சி மேலிடம் உத்தரவு பிறப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது ஆந்திர மாநிலத்தில் அம் மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி 5 சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு துணை முதல்-மந்திரிகள் வழங்கி இருப்பது போன்று, கர்நாடகத்திலும் முக்கிய சமுதாயங்களை சேர்ந்த 3 பேருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து...

அதன்படி, ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்த ஆர்.அசோக் அல்லது அஸ்வத் நாராயணாவுக்கும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த கோவிந்த கார்ஜோள், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து ஈசுவரப்பா ஆகியோருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மந்திரிசபை விரிவாக்கத்தின் காரணமாக எம்.எல்.ஏ.க்கள் இடையே ஏற்பட்டுள்ள அதிருப்தி, அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் முக்கிய பதவிகள் வழங்க வேண்டும் என்பதற்காகவும் 3 பேருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே துணை முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.வான ரமேஷ் ஜார்கிகோளி தனக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று எடியூரப்பாவை வலியுறுத்தி வருவதால் பா.ஜனதா மேலிடம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே துணை முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பதாக தெரிகிறது.

எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு

அதே நேரத்தில் 3 பேருக்கு மட்டும் துணை முதல்-மந்திரி பதவி வழங்கினால் கட்சியின் மூத்த தலைவர்களான ஜெகதீஷ் ஷெட்டர், ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் அதிருப்தி அடைவார்கள் என்று கட்சி மேலிடத்திடம் எடியூரப்பா கூறி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் துணை முதல்-மந்திரி பதவி யாருக்கும் வழங்க வேண்டாம் என்று கட்சி மேலிடத்திடம் எடியூரப்பா வலியுறுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 3 துணை முதல்-மந்திரிகளை நியமிக்கும் முடிவுக்கு பெங்களூருவை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஏனெனில் துணை முதல்-மந்திரிகள் இருந்தால் தங்களது தொகுதி பிரச்சினைகள், நிதி ஒதுக்குவது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவை நேரடியாக சந்தித்து பேச முடியாது என்று அந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக எடியூரப்பாவின் அதிகாரத்தை குறைக்கவும், அவருக்கு கடிவாளம் போடவும் 3 துணை முதல்-மந்திரிகளை நியமிக்க கட்சி மேலிடம் மூலம் பி.எல்.சந்தோஷ் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Next Story