காங்கிரசுடனான கூட்டணியை முறித்துவிட்டு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட ஜனதாதளம்(எஸ்) கட்சி முடிவு
காங்கிரசுடனான கூட்டணியை முறித்துவிட்டு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட ஜனதாதளம்(எஸ்) கட்சி முடிவு செய்துள்ளது.
பெங்களூரு,
காங்கிரசுடனான கூட்டணியை முறித்துவிட்டு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட ஜனதாதளம்(எஸ்) கட்சி முடிவு செய்துள்ளது.
சித்தராமையா குற்றச்சாட்டு
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. அந்த கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. இந்த நிலையில், கூட்டணி அரசு கவிழ்வதற்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தான் காரணம் என்றும், தனது மகனும் முதல்-மந்திரியாக இருந்த குமாரசாமிக்கு காங்கிரஸ் கட்சியினர் தொல்லை கொடுத்ததாகவும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா குற்றச்சாட்டு கூறி இருந்தார்.
ஆனால் கூட்டணி அரசு கவிழ்வதற்கு தான் காரணம் இல்லை என்றும், தேவே கவுடா, குமாரசாமி மற்றும் ரேவண்ணா தான் காரணம் என்றும், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களுடன் கலந்து பேசாமல் குமாரசாமி தன்னிச்சையாக முடிவு எடுத்ததே கூட்டணி அரசு கவிழ்வதற்கு முக்கிய காரணம் என்றும், குறிப்பாக தேவேகவுடாவை கடுமையாக தாக்கியும் சித்தராமையா பேசி இருந்தார். இருவரும் மாறி மாறி கூறிய குற்றச்சாட்டுகள் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம்
சித்தராமையா மீது தேவேகவுடா குற்றச்சாட்டு கூறுவதற்கு கூட்டணி அரசில் நடந்ததாக கூறப்படும் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் காரணம் என்று கூறப்படுகிறது. தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூறி வந்தனர். இதையடுத்து, தொலைபேசி ஒட்டு கேட்பு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
இது முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமிக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட சித்தராமையா தான் காரணம் என்று தேவேகவுடா கருதுவதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தான் சித்தராமையா மீது தேவேகவுடா குற்றச்சாட்டு கூறி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தனித்து போட்டியிட முடிவு
இந்த நிலையில், தேவேகவுடா, சித்தராமையா இடையிலான வார்த்தை போரால் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்து கொள்ள ஜனதாதளம்(எஸ்) கட்சி தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால், அந்த 17 தொகுதிகளுக்கும் நடைபெறும் இடைத்தேர்தலில் கூட்டணி அமைக்காமல் ஜனதாதளம்(எஸ்) கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்திருக்கிறது.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு தேவேகவுடா அளித்த பேட்டியில், ‘ஜனதாதளம்(எஸ்) கட்சியை மாநிலத்தில் வளர்க்க இனிவரும் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவது அவசியமானது,‘ என்று கூறி இருந்தார். இதனால் இடைத்தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) தனித்து போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. அதே நேரத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரசும் விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
Related Tags :
Next Story