குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா: வேடம் அணியும் பக்தர்கள் விரதம் தொடங்கினர்


குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா: வேடம் அணியும் பக்தர்கள் விரதம் தொடங்கினர்
x
தினத்தந்தி 25 Aug 2019 3:30 AM IST (Updated: 25 Aug 2019 12:33 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு, வேடம் அணியும் பக்தர்கள் விரதம் தொடங்கினர்.

குலசேகரன்பட்டினம், 

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு, வேடம் அணியும் பக்தர்கள் விரதம் தொடங்கினர்.

தசரா திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு சுவாமிகளின் வேடங்களை அணிந்து நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபடுவார்கள்.

கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10-ம் நாளான அக்டோபர் மாதம் 8-ந்தேதி இரவில் விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது.

விரதம் தொடங்கிய பக்தர்கள்

தசரா திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்கள் பல்வேறு நாட்கள் விரதம் இருப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விரதம் இருக்கும் ஏராளமான பக்தர்கள் நேற்று காலையில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் கடலில் புனித நீராடி, அம்மன் பாதத்தில் துளசிமாலை வைத்து வழிபட்டனர். அவர்களுக்கு கோவில் அர்ச்சகர் குமார் பட்டர் துளசிமாலை அணிவித்தார்.

விரதம் தொடங்கிய பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு சென்று, அங்குள்ள கோவிலின் அருகில் தசரா பிறை அமைத்து, அதில் தங்கியிருந்து அம்மனை வழிபடுவார்கள். அவர்கள் தினமும் ஒரு வேளை மட்டும் பச்சரிசி உணவு சாப்பிட்டு விரதம் மேற்கொள்வார்கள்.

பல்வேறு வேடங்கள்

கோவிலில் கொடியேற்றம் நடந்ததும், விரதம் இருக்கும் பக்தர்கள், கோவில் அர்ச்சகரிடம் காப்பு அணிவார்கள். பின்னர் அவர்கள் அம்மன், சிவன், பிரம்மன், விஷ்ணு, ராமர், லட்சுமணர், கிருஷ்ணர், முருகர், விநாயகர், இந்திரன், அனுமார், நாரதர் போன்ற பல்வேறு சுவாமிகளின் வேடங்களையும், அரசன், அரசி, குறவன், குறத்தி, போலீஸ், நர்ஸ், கரடி போன்ற பல்வேறு வேடங்களையும் அணிவார்கள். ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருந்து வேடம் அணியும் பக்தர்கள் குழுவாக பல்வேறு ஊர்களுக்கும் சென்று காணிக்கை வசூலித்து, 10-ம் நாள் இரவில் கோவிலில் செலுத்துவார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Next Story