உளவுத்துறை எச்சரிக்கை: புதுவையில் 2-வது நாளாக அதிரடி சோதனை


உளவுத்துறை எச்சரிக்கை: புதுவையில் 2-வது நாளாக அதிரடி சோதனை
x
தினத்தந்தி 24 Aug 2019 11:00 PM GMT (Updated: 24 Aug 2019 7:27 PM GMT)

மத்திய உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரியில் போலீசார் 2-வது நாளாக அதிரடி சோதனை நடத்தினர்.

புதுச்சேரி,

விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த கொண்டாட்டத்தின் போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், இலங்கை வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் 6 பேர் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவி இருப்பதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுவையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

புதுவையில் போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா உத்தரவின்பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று 2-வது நாளாக போலீசார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். புதுவை மாநில எல்லைப்பகுதியான கோரிமேடு, கன்னியக்கோவில், மதகடிப்பட்டு, காலாப்பட்டு பகுதியில் போலீசார் சிறப்பு சோதனைச்சாவடிகள் அமைத்துள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன் மற்றும் போலீசார் நேற்று மாலை கருவடிக்குப்பம் சந்திப்பில் வாகன சோதனை நடத்தினர்.

இதே போல் ஒவ்வொரு காவல்நிலைய போலீசாரும் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தினார்கள். இதில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாராவது இருந்தால் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது.

இதே போல் போலீசார் புதுவை நகர பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். லாட்ஜ் ஊழியர்களிடம் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாராவது வந்தால் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் கடற்கரை சாலை, புதிய பஸ்நிலையம், ரெயில் நிலையம், மணக்குள விநாயகர் கோவில், இருதய ஆண்டவர் கோவில் உள்பட பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story