நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 723 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் துணை வேந்தர் பிச்சுமணி வழங்கினார்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 723 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை துணை வேந்தர் பிச்சுமணி வழங்கினார்.
பேட்டை,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 723 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை துணை வேந்தர் பிச்சுமணி வழங்கினார்.
பட்டமளிப்பு விழா
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துறைகளின் 27-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சி. கலையரங்கில் நேற்று நடந்தது. பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு வரவேற்று பேசினார். துணை வேந்தர் பிச்சுமணி தலைமை தாங்கி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 723 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். சிறப்பு அழைப்பாளராக திருவனந்தபுரம் விக்ரம்சாராபாய் விண்வெளி மைய இயக்குனர் சோமநாத் கலந்து கொண்டு, பட்டமளிப்பு உரையாற்றினார். அப்போது, அவர் கூறியதாவது:-
இந்த நாள் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத நாள். உங்கள் வாழ்வில் நீங்கள் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறீர்கள். வாழ்வில் நிறைய சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும். எனினும் நீங்கள் இங்கு கற்றுள்ள கல்வி, பெற்றுள்ள அனுபவத்தை கொண்டு சவால்களை சிறப்பாக எதிர்கொள்வீர்கள் என நம்புகிறேன்.
மறுசுழற்சி முறையில் ராக்கெட்
மறுசுழற்சி முறையில் ராக்கெட்டை பயன்படுத்தும் தொழில்நுட்பத்துக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. அடுத்த கட்டமாக அந்த தொழில்நுட்பத்தை இலக்காக கொண்டு அனைவரும் பணியாற்ற இருக்கிறார்கள். சிறிய அளவிலான செயற்கை கோளை சுமந்து செல்லும் ராக்கெட்டுகளை உருவாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும். சந்திரயான்-2 வருகிற 7-ந் தேதி நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கிறோம்.
2030-ம் ஆண்டிற்குள் தொழில் நுட்ப வளர்ச்சி அதிவேக வளர்ச்சி அடையும். வளரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றால் போல் மாணவர்களாகிய நீங்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டி
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துறைகளால் கவரப்பட்ட நான், இங்கு படிக்கும் இளம் மாணவர்களை சந்திப்பதற்காக இங்கு வந்துள்ளேன். மகேந்திரகிரி இஸ்ரோ உந்தும வளாகம் நெல்லை மாவட்டத்தில் இருக்கிறது. இந்த வளாகத்துக்கும், இங்குள்ள பேராசிரியர்களுக்கும் தொடர்பு ஏற்படுத்த விரும்புகிறேன்.
தற்போது இஸ்ரோவின் 50-வது ஆண்டு நடக்கிறது. இந்த ஆண்டு தான் விக்ரம் சாராபாயின் நூற்றாண்டு விழாவும் கூட. விக்ரம்சாராபாய் நூற்றாண்டு விழா கடந்த 12-ந் தேதி ஆமதாபாத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஆகஸ்டு 12-ந் தேதி வரை நூற்றாண்டு விழாவை நாடு முழுவதும் கொண்டாட இருக்கிறோம். அப்போது, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, இந்தியர்கள் 3 பேர் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அந்த இலக்கை நோக்கி நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம். அதற்கான ராக்கெட், தொழில் நுட்பம் தயாராக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பட்டமளிப்பு விழாவில் தேர்வாணையர் சுருளியாண்டி, பல்வேறு துறைகளின் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story