எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ரங்கசாமி திடீர் ஆலோசனை; கவர்னரை சந்திக்கும் திட்டம் ரத்து


எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ரங்கசாமி திடீர் ஆலோசனை; கவர்னரை சந்திக்கும் திட்டம் ரத்து
x
தினத்தந்தி 24 Aug 2019 11:15 PM GMT (Updated: 24 Aug 2019 7:34 PM GMT)

புதுவை எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ரங்கசாமி திடீர் ஆலோசனை நடத்தினார். கவர்னரை சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தது திடீரென ரத்தானது.

புதுச்சேரி,

புதுவையில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர கடிதம் கொடுத்துள்ளார். இதையொட்டி எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். எதிர்க்கட்சி வரிசையில் உள்ள அ.தி.மு.க., பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்களை தனியார் ஓட்டலுக்கு அழைத்து அவர் பேசினார். அப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

இதற்கிடையே கவர்னர் கிரண்பெடியை சந்தித்து பேசவும் நேரம் ஒதுக்கித்தர கேட்கப்பட்டது. கவர்னரை சந்தித்து என்னென்ன விவரங்கள் குறித்து பேசுவது என்பது தொடர்பாகவும் அவர்கள் விவாதித்தனர்.

ஆனால் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் கவர்னரை சந்திக்கும் முடிவு திடீரென கைவிடப்பட்டது.

இந்தநிலையில் சபாநாயகர் சிவக்கொழுந்துவை அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான் ஆகியோர் அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேசியதாக தெரிகிறது. இத்தகைய தொடர் சம்பவங்கள் காரணமாக புதுவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவியது.

Next Story