திருப்பூரில் ஏ.டி.எம். மையத்துக்குள் கம்பியுடன் தூங்கிய வாலிபரால் பரபரப்பு


திருப்பூரில் ஏ.டி.எம். மையத்துக்குள் கம்பியுடன் தூங்கிய வாலிபரால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 Aug 2019 3:15 AM IST (Updated: 25 Aug 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் ஏ.டி.எம். மையத்துக்குள் கம்பியுடன் படுத்து தூங்கிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் கண்ணகிநகர் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்துக்குள் நேற்று காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் படுத்திருந்தார். பணம் எடுக்க சென்றவர்கள் ஏ.டி.எம். மையத்துக்குள் ஒருவர் படுத்து தூங்கிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த நபர், ஏ.டி.எம். மையத்தின் கதவையும் பூட்டி வைத்திருந்தார். ஏ.டி.எம். எந்திரத்தின் கீழ் பகுதி கதவு திறந்து கிடந்தது. இதனால் ஏ.டி.எம். எந்திரத்தை அந்த நபர் உடைத்து திருட முயன்றதாக தகவல் பரவியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அப்பகுதியை சேர்ந்த வாலிபர் என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. அவருடைய குடும்பத்தினரை அழைத்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் அந்த வாலிபர், மனநலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான், சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்ததாகவும், வெளியே சென்றவர் ஏ.டி.எம். மையத்துக்குள் படுத்து தூங்கியதும் தெரியவந்தது.

இருப்பினும் ஏ.டி.எம். எந்திரத்தின் கீழ் பகுதி திறந்து கிடந்தது. அந்த வாலிபரின் கையிலும் சிறிய கம்பி இருந்துள்ளது. இதனால் அவர் ஏ.டி.எம். எந்திரத்தின் கதவு பகுதியை திறந்தாரா? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். பணம் இருக்கும் பகுதி எதுவும் திறக்கப்படவில்லை. பின்னர் போலீசார் அந்த நபரின் விவரங்கள் மற்றும் கைரேகையை பதிவு செய்து குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊத்துக்குளி ரோடு பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம்.எந்திரங்கள் உடைக்கப்பட்டு திருட முயற்சி நடந்த நிலையில், கண்ணகி நகரில் ஏ.டி.எம். மையத்துக்குள் தூங்கிய வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story