மனைவி பெயரில் போலி பில் தயாரித்து ரூ.42 லட்சம் மோசடி; சரக்கு போக்குவரத்து நிறுவன மேலாளர் கைது
மனைவி பெயரில் போலி பில் தயாரித்து ரூ.42 லட்சம் மோசடி செய்த சரக்கு போக்குவரத்து நிறுவன மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
கோவை சவுரிபாளையம் என்.ஜி.ஆர். வீதியை சேர்ந்த தேவராஜ் என்பவருடைய மகன் சஞ்சீவிகுமார்(வயது34). இவர் உப்பிலிபாளையத்தில் சரக்குகளை அனுப்பும் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் கிளை மேலாளராக கடந்த 2016-ம் ஆண்டு முதல் கடந்த பிப்ரவரி மாதம்வரை வேலை பார்த்தார்.
அப்போது தன்னுடைய மனைவி கவிதா பெயரில், டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருவதுபோல் போலி பில் தயாரித்துள்ளார். தான் வேலை பார்த்து வரும் நிறுவனங்களுக்கு வரும் சரக்கு பார்சல்களை அந்த நிறுவனத்தின் பெயரிலேயே வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பிவிட்டு, வாடிக்கையாளர்களிடம் பெறப்படும் பணத்தை தன்னுடைய மனைவி கவிதாவின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். இதற்கு அவர் போலி பில்லை பயன்படுத்தியுள்ளார்.
சஞ்சீவிகுமார் வேலை பார்த்த டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் சில மாதங்களுக்கு முன்பு கணக்கு தணிக்கை நடைபெற்றது. அப்போது சஞ்சீவிகுமார், தன்னுடைய மனைவி பெயரில் போலி பில் தயாரித்து ரூ.42 லட்சம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து டிரான்ஸ்போர்ட் நிறுவன நிர்வாகி உதயகுமார் கோவை நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் பெருமாள் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மல்லிகா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் டிரான்ஸ்போர்ட் நிறுவன மேலாளர் சஞ்சீவிகுமாரை போலீசார் கைது செய்தனர். அவருடைய மனைவி கீதாவை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story