பொள்ளாச்சி பகுதியில், 3-வது நாளாக தீவிர சோதனை


பொள்ளாச்சி பகுதியில், 3-வது நாளாக தீவிர சோதனை
x
தினத்தந்தி 25 Aug 2019 3:45 AM IST (Updated: 25 Aug 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பகுதியில் 3-வது நாளாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி,

தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி பகுதியில் நேற்று 3-வது நாளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதை தவிர தற்காலிக சோதனை சாவடிகள் மற்றும் கேரள எல்லையில் சோதனை சாவடிகளிலும் போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதை தவிர கோவில்கள் உள்பட வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் அதிக கூடும் வணிக வளாகங்கள், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து வாகன நிறுத்துமிடம், பயணிகளின் உடைமைகளை போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தினர். மேலும் தண்டவாள பகுதிகளிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி பகுதி கேரள எல்லையையொட்டி அமைந்து உள்ளதால் சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கேரளா வழியாக தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவதை தடுக்க மாநில எல்லையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பஸ், கார், சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு பிறகு அனுப்பி வருகின்றனர். இதை தவிர பல்லடம் ரோடு, கோவை ரோடு, மீன்கரை ரோடு, உடுமலை ரோடு ஆகிய முக்கிய சாலைகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

பொள்ளாச்சி சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளையும் அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அப்போது உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கினால் உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தங்கும் நபர்களின் அடையாள அட்டை வாங்கி சரிபார்க்க வேண்டும். மேலும் எதற்காக வந்து இருக்கிறார்கள் என்பது குறித்த விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. உள்ளூர் போலீசாருடன், ஆயுதப்படை போலீசார் பணி அமர்த்தப்பட்டு பொள்ளாச்சி பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது புதிதாக வீடுகளை வாடகை எடுத்து தங்கினாலோ அல்லது வந்து சென்றாலோ அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கிணத்துக்கடவில் தமிழக-கேரளா எல்லையில் வீரப்பகவுண்டனூர் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 3-வது நாளாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதன்படி அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் வர போலீசார் அனுமதிக்கின்றனர். மேலும் கோவையில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதி என கருதப்படும் நபரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ள புகைபடத்தை சோதனைசாவடியில் ஒட்டிவைத்துள்ளனர். இதேபோல் கிணத்துக்கடவில் கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ் சாலை, கிணத்துக்கடவு ரெயில்நிலையத்திலும் போலீசார் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வால்பாறையில் உள்ள அனைத்து காட்டேஜ்,தங்கும் விடுதிகள், லாட்ஜ்களில் விடிய, விடிய தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. சந்தேகப்படும்படியான நபர்கள் வந்தால் உடனே தகவல் தெரிவிக்க உரிமையாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

வால்பாறை அருகே உள்ள தமிழக கேரள எல்லைப்பகுதியான சோலையார்நகர் மற்றும் மளுக்கப்பாறை பகுதியில் சேக்கல்முடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயசூரியன் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசார், வனத்துறையினர் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

Next Story