விநாயகர் சதுர்த்தி வழிபாட்டின்போது விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் - கலெக்டர் அறிவுரை


விநாயகர் சதுர்த்தி வழிபாட்டின்போது விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் - கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 25 Aug 2019 3:45 AM IST (Updated: 25 Aug 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டின்போது விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் அறிவுரை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

விழுப்புரம், 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை நிறுவுதல், வழிபடுதல், சிலையை கரைத்தல் தொடர்பாக ஏற்படும் சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பது, பொதுமக்களின் பாதுகாப்பு, போக்குவரத்தை சீர்படுத்துதல், மாசு கட்டுப்பாடு தொடர்பாக சில வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

எனவே விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சிலையை நிறுவுவோர் உதவி கலெக்டர் அல்லது கோட்டாட்சியரிடம் தடையின்மைச்சான்று பெற வேண்டும். சிலை வைக்கும் இடம் பொது இடங்களாக இருப்பின் உள்ளாட்சி அமைப்புகளிடம் தடையின்மை சான்று பெற வேண்டும். நெடுஞ்சாலை, பிற துறையிடம் என்றால் அவர்களிடம் சான்று பெற வேண்டும். போலீஸ் நிலையம், தீயணைப்புத்துறை, மின்வாரியத்திடம் இருந்தும் அனுமதி பெறப்பட வேண்டும். இந்த அனுமதி பெற்ற விண்ணப்பங்கள் மீது உதவி கலெக்டர், கோட்டாட்சியரால் பரிசீலனை செய்து அனுமதி வழங்கப்படும்.

மேலும் நிறுவப்படும் சிலை தூய களிமண்ணால் இருக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்டிருக்க கூடாது. நீரில் கரையக்கூடிய நச்சு தன்மையற்ற இயற்கை சாயங்களை பயன்படுத்த வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு தற்காலிக கொட்டகைகள் ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சிலையின் உயரம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதர வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் அருகில் சிலைகள் நிறுவுதல் தவிர்க்கப்பட வேண்டும். பூஜை நேரங்களில் காலை 2 மணி நேரமும் மாலை 2 மணி நேரமும் மட்டும் ஒலிப்பெருக்கி பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது.

வழிபாட்டின்பேரில் சட்டத்துக்கு புறம்பான செயல்களை அனுமதிக்கக்கூடாது. அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகவோ, சமுதாய தலைவர்களுக்கு ஆதரவாகவோ விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது. சிலையின் பாதுகாப்புக்காக 2 தன்னார்வ தொண்டர்களை 24 மணி நேரமும் பணியில் அமர்த்த வேண்டும். சாதிய வெறுப்புகளை தூண்டக்கூடிய முழக்கங்களை எழுப்பக் கூடாது. மத அடிப்படையிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் பிற மதத்தினரின் மனதை புண்படுத்தும்படியான செயல்களை அனுமதிக்கக்கூடாது. பொது அமைதி, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அரசு நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும். நிர்ணயிக்கப்படும் இடங்களில் மட்டுமே சிலைகள் கரைக்கப்பட வேண்டும்.

விநாயகர் சிலைகளை நீரில் கரைத்த 48 மணி நேரத்திற்குள் ஆறுகள், குளங்கள், கடற்கரைகளில் சிலைகளுடன் கொண்டு வரப்பட்ட பொருட்கள் உள்ளூர் பஞ்சாயத்துகள் சார்பில் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story