மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம்


மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம்
x
தினத்தந்தி 25 Aug 2019 3:00 AM IST (Updated: 25 Aug 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் நேற்று சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.

திண்டுக்கல்,

நீர்நிலைகளை பராமரிப்பது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நீர் மேலாண்மை இயக்க பாதுகாப்பு குறித்த சிறப்பு கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது.

ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி செயலாளர் பாலதண்டாயுதபாணி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அரசு ஜல் சக்தி அபியான் என்ற திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்கும் விதமாக கிராமப்புறங்களில் உள்ள நீர் நிலைகளை பராமரித்து நீரை தேக்கவும், குளம், குட்டைகளை ஆழப்படுத்தி பராமரிக்கவும் நிதி ஒதுக்கீடு செய்தது.

அதன்படி ஆத்துார் ஒன்றியத்தில் 31 குளங்கள், 16 சிறு பாசன கண்மாய்கள் உள்ளிட்ட 47 நீர்நிலைகளில் கரைகளை பலப்படுத்தி, நீர் தேங்கும் இடங்களை ஆழப்படுத்தி தண்ணீர் தேக்கவும், விவசாய ஆயக்கட்டு பகுதிகளுக்கு முறையாக தண்ணீர் செல்வதற்கு ஏதுவாகவும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வரும் காலங்களில் மழை நீர் சேகரிப்பு இல்லாத வீடுகளுக்கு மின் வசதி, குடிநீர் வசதி, அரசு மானியம் உள்ளிட்டவை வழங்கப்படுவது நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதே போல் காந்திகிராம ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் தெய்வம் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஆத்தூர் ஆணையாளர் சீத்தாராமன் கலந்து கொண்டு பேசினார். இதே போல் பஞ்சம்பட்டியில் ஊராட்சி செயலாளர் சேசுராஜ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். அம்பாத்துரையில் ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

ஒட்டன்சத்திரம் ஒன்றிய பகுதியிலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நீர் மேலாண்மை குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த ஒன்றிய நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று சத்திரப்பட்டி, விருப்பாச்சி, லக்கையன்கோட்டை, புலியூர்நத்தம், பெரியகோட்டை உள்பட 35 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

கேதையுறும்பு ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்துக்கு ஒன்றிய ஆணையாளர் கண்ணன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பு, நீர்நிலைகளை தூர்வாரி புதுப்பித்தல், நீர்வடிப்பகுதி மேம்பாடு மற்றும் தீவிர காடு வளர்ப்பு உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் அனுமந்தராயன்கோட்டை ஊராட்சி சார்பில் நீர் மேலாண்மை இயக்க பாதுகாப்பு குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் அலவாச்சிபட்டி வேட்டுவன் குளம் அருகே நடந்தது. இதற்கு ஊராட்சி செயலர் வி.முருகன் தலைமை தாங்கினார். இந்தகூட்டத்தில் நீர் பாதுகாப்பு, மழை நீர் சேகரிப்பு, பாரம்பரியமாக உள்ள நீர் நிலைகள் மற்றும் இதர நீர் நிலைகளை புதுப்பித்தல், மரக்கன்றுகள் நடுதலின் அவசியம் ஆகியவை குறித்து கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டனர்.

நத்தம் ஒன்றியம் லிங்கவாடி ஊராட்சியில் உள்ள வலையபட்டியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இதற்கு பற்றாளர் ராம்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் அன்புசெல்வன் முன்னிலை வகித்தார். இதுபோல வேலம்பட்டி ஊராட்சி செல்லம்புதூரில் இளநிலை உதவியாளர் விஜயலட்சுமி தலைமையில் ஊராட்சி செயலர் செந்தில்குமரன் முன்னிலையிலும், புன்னப்பட்டி ஊராட்சி உலுப்பகுடியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் தலைமையில் ஊராட்சி செயலர் சின்னச்சாமி முன்னிலையிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. பண்ணுவார்பட்டி ஊராட்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசராகவன் தலைமையில் ஊராட்சி செயலர் கருப்பையா முன்னிலையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டங்களில் வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும், ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து தூர்ந்து போன ஆழ்துளை கிணற்றின் நீர் வளம் கண்டறிந்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story