கிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் ஊழியர் கொலையில் வாலிபர் கைது


கிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் ஊழியர் கொலையில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Aug 2019 4:00 AM IST (Updated: 25 Aug 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

குருபரப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே பேட்டப்பனூரில் டாஸ்மாக் கடை உள்ளது. இதில் திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள காவேரி நகரை சேர்ந்த ராஜா (வயது 45) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். கடந்த 14-ந் தேதி இரவு இவர் டாஸ்மாக் கடையில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது தொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அதில் இந்த கொலையில் ஈடுபட்டது வேப்பனப்பள்ளி அருகே உள்ள நல்லூரை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் அரவிந்தன் (22) என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

கைதான அரவிந்தன் அந்த பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து வந்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி அந்த பகுதியில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த 15-ந் தேதி சுதந்திர தினம் என்பதால் மதுக்கடைகள் மூடப்பட்டது. இதனால் அதற்கு முதல் நாள் (14-ந் தேதி) மொத்தமாக மதுபாட்டில்களை வாங்க அரவிந்தன் கடைக்கு வந்துள்ளார்.

அவர் கடையை மூடக்கூடிய நேரத்தில் ராஜாவிடம் மதுபாட்டில்கள் கேட்டார். அப்போது ராஜா கடையில் அன்றைய தினம் வசூல் ஆன பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அரவிந்தன் அந்த பணத்தை கொள்ளையடிக்க முடிவு செய்தார். இதற்காக அவர் கடைக்குள் புகுந்து தான் கையில் வைத்திருந்த சிறிய கத்தியால் ராஜாவை குத்திக்கொலை செய்து ரூ.3 லட்சத்து 35 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

கைதான அரவிந்தன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் “பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் நான் மதுக்கடைக்குள் நுழைந்தேன். அங்கு தனியாக இருந்த விற்பனையாளர் ராஜாவை கொலை செய்து விட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றேன்” என கூறியுள்ளார்.

இந்த கொலையில் அரவிந்தனை தவிர வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே கடையில் கொள்ளையடித்த பணத்தை அரவிந்தன் வீடு அருகில் குழி தோண்டி மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதையும் போலீசார் மீட்டனர். கைதான அரவிந்தனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story