சாலையின் குறுக்கே நாய் வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து வாலிபர் பலி - உடல் உறுப்புகள் தானம்


சாலையின் குறுக்கே நாய் வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து வாலிபர் பலி - உடல் உறுப்புகள் தானம்
x
தினத்தந்தி 24 Aug 2019 11:15 PM GMT (Updated: 24 Aug 2019 8:22 PM GMT)

சாலையின் குறுக்கே நாய் வந்ததால், மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் உறுப்புகளை, பெற்றோர் தானம் செய்தனர்.

தாம்பரம்,

சென்னை மாதவரம் அருள்நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் வினோத்குமார்(வயது 26). இவர், ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மாதவரத்தில் இருந்து மஞ்சம்பாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

மஞ்சம்பாக்கம் தனியார் கல்லூரி அருகே வந்தபோது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் திடீரென்று பிரேக் போட்டார். இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த வினோத்குமாருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

உடனடியாக அவரை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை வினோத்குமார் பரிதாபமாக இறந்தார். மகனின் உடலை பார்த்து கதறி அழுத அவரது பெற்றோர், வினோத்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து டாக்டர்கள், வினோத்குமாரின் உடல் உறுப்புகளை தானமாக எடுத்தனர். விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கவுசல்யா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

இதேபோல் தாம்பரம் அடுத்த சந்தோஷபுரம், ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிகுமார்(21). இவர், பொத்தேரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இறுதி ஆண்டு படித்துவந்தார்.

இவர், தனது மோட்டார்சைக்கிளில் தாம்பரத்தில் இருந்து பெருங்களத்தூர் நோக்கி சென்றார். தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் சென்றபோது, சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோட்டார்சைக்கிள் மோதி கீழே விழுந்தார்.

அதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் ஹரிகுமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

* மாதவரத்தை சேர்ந்த அகஸ்டின்(26) என்பவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்துவிட்டு ஆட்டோவில் தப்பிய பழனி(26), மணிகண்டன்(20), வடிவேல்(32), ராஜசேகர்(27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

* மயிலாப்பூரில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறில் கேபிள் குமார், அவருடைய மகன் மணிகண்டன் ஆகியோரை கத்தியால் குத்திய வழக்கில் மனோஜ், ரவுடிகள் அருள் மற்றும் தமிழரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

* ஆதம்பாக்கம் மேற்கு கரிகாலன் சாலை மற்றும் புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி.நகர் மார்க்கெட் பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

*ராயப்பேட்டை, ஐஸ் அவுஸ், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள்கள் குறித்து வைத்து திருடிய காஜாமொய்தீன்(25), முகமது சபீக்(26), முகமது மைதீன்(22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

*நீலாங்கரையில் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிய 45 வயது பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் குப்பன் (35) என்பவரை அக்கம் பக்கத்தினர் மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story