குமரி மாவட்டத்தில், இன்று காவலர் பணிக்கான தேர்வு 8 மையங்களில் நடக்கிறது 9 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்


குமரி மாவட்டத்தில், இன்று காவலர் பணிக்கான தேர்வு 8 மையங்களில் நடக்கிறது 9 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்
x
தினத்தந்தி 24 Aug 2019 10:30 PM GMT (Updated: 24 Aug 2019 8:59 PM GMT)

குமரி மாவட்டத்தில் காவலர் பணிக்கான தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) 8 மையங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை 9 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்.

நாகர்கோவில்,

காவல்துறையில் 2-ம் நிலை காவலர்கள் (ஆண், பெண்), 2-ம் நிலை சிறைக்காவலர்கள் (ஆண், பெண், இரண்டாம் பாலினத்தவர்கள்) மற்றும் தீயணைப்பாளர்கள் (ஆண்கள்) பதவிகளுக்கான பொது எழுத்து தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது. குமரி மாவட்டத்திலும் காவலர் எழுத்து தேர்வு 8 மையங்களில் நடைபெறுகிறது.

அதாவது குமாரகோவிலில் உள்ள நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம், நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, இந்து கல்லூரி, கோட்டார் குமரி மெட்ரிகுலேசன் பள்ளி, சுங்கான்கடை புனித சேவியர் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி, வின்ஸ் மகளிர் கல்லூரி, வின்ஸ் ஆண்கள் கல்லூரி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவலர் பணிக்கான தேர்வை 9,046 பேர் எழுதுகிறார்கள். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கும்.

டி.ஐ.ஜி. ஆய்வு

இதையொட்டி நேற்று 8 மையங்களின் தேர்வு அறைகளில் தேர்வர்களின் எண் ஒட்டும் பணி நடைபெற்றது. மேலும் தேர்வர்களுக்கான குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதற்காக ஒவ்வொரு தேர்வு மையத்திலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று பிற்பகலில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு நாகர்கோவில் வந்தார். பின்னர் அவர் குமரி மாவட்டத்தில் உள்ள 8 தேர்வு மையங்களையும் ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும், தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைய துணைக்குழு தலைவருமான ஸ்ரீநாத் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் சென்றனர். அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Next Story