வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மும்பையில் உறியடி திருவிழா கொண்டாட்டம்
மராட்டியத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மும்பையில் உறியடி விழா கொண்டாடப்பட்டது.
மும்பை,
மராட்டியத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மும்பையில் உறியடி விழா கொண்டாடப்பட்டது.
உறியடி திருவிழா
மராட்டியத்தில் ஆண்டு தோறும் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ‘தஹி ஹண்டி‘ என்று அழைக்கப்படும் தயிர்பானை உடைப்பு திருவிழா மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படும். இது உறியடி விழா என்றும் அழைக்கப்படுகிறது. குறிப்பாக மும்பை, தானே மற்றும் புனே உள்ளிட்ட பகுதிகளில் இந்த திருவிழா களை கட்டும்.
மும்பையில் ஒவ்வொரு வீதிகளிலும் அந்தரத்தில் தொங்கவிடப்பட்டு இருக்கும் தயிர் பானைகளை உடைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மண்டல்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் நடைபெறும் உறியடி விழாக்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பணம் மற்றும் கோப்கை, கேடயங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும்.
கிருஷ்ணஜெயந்திக்கு ஒரு மாதத்துக்கு முன்பே மனித பிரமிடு அமைத்து ஒத்திகையில் ஈடுபடும் கோவிந்தாக்கள் மும்பை, தானேயில் பல்வேறு இடங்களில் நடைபெறும் உறியடி விழாவில் கலந்து கொண்டு தயிர்பானையை உடைத்து அசத்துவார்கள். தானேயில் இருந்து கோவிந்தாக்கள் மும்பை வந்து இங்கு நடைபெறும் உறியடி விழாக்களில் கலந்து கொண்டு கலக்குவார்கள்.
வழக்கமான உற்சாகம் இல்லை
இந்த ஆண்டும் மும்பையில் உறியடி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. எனினும் மராட்டியத்தில் கோலாப்பூர், சாங்கிலி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் மும்பையில் உறியடி விழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெறவில்லை. பாரம்பரியத்தை நினைவுக்கூரும் வகையில் தான் இந்த விழாக்கள் நடந்தன. பல இடங்களில், தயிர்பானையை உடைக்கும் கோவிந்தாக்களுக்கு வழங்கப்பட இருந்த பரிசுப்பொருட்கள் வெள்ள நிவாரணத்துக்கு கொடுக்கப்பட்டன.
மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் 9 அடுக்குகளுக்கு மனித பிரமிடு அமைத்து தயிர் பானையை உடைத்த கோவிந்தாக்களுக்கு கூட கைதட்டுகளும், பாராட்டுகளும் தான் பரிசாக வழங்கப்பட்டது. மாநிலத்தில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு ஒரு சில இடங்களில் உறியடி விழாவையொட்டி ஏற்பாடு செய்ய்பபட்டு இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
வெள்ளநிவாரண நிதி
இதுகுறித்து மும்பையில் பெண்களுக்கான உறியடி விழா நடத்தும் கோரக்நாத் மண்டலை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:-
“நாங்கள் தஹி ஹண்டியை கொண்டாடுகிறோம். ஆனால் வழக்கமான உற்சாகத்துடன் இல்லை. பாரம்பரியத்தை பின்பற்றும் வகையில் மட்டுமே இந்த ஆண்டு தஹி ஹண்டியை கொண்டாட முடிவு செய்து உள்ளோம். வெள்ளத்தால் எங்கள் சகோதர, சகோதரிகள் சந்தித்த கடும் பாதிப்புகளை நாங்கள் மறக்கவில்லை”.
இவாறு அவர் கூறினார்.
மேலும் இந்த ஆண்டு தஹிஹண்டி எளிமையாக கொண்டாடப்பட்டது குறித்து மாநில மந்திரி ராம் கதம் கூறும்போது, எங்கள் பராம்பரியத்தின் ஒரு பகுதியாக இன்று தஹிஹண்டியை கொண்டாடுகிறோம். ஆனால் இந்த கொண்டாட்டம் மிகவும் எளிமையான முறையில் உள்ளது. இதற்காக அதிக பணத்தை செலவு செய்ய வேண்டியதில்லை. அந்த பணத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு அனுப்ப உள்ளோம்” என்றார்.
அருண் ஜெட்லி மறைவால்...
மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி வித்யா தாக்கூர், தஹிஹண்டி கொண்டாட்டத்துக்கு ஆகும் ரூ.1 லட்சத்தை முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக கூறினார்.
இதேபோல பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான அருண் ஜெட்லி மறைவை அடுத்து பல இடங்களில் பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த உறியடி விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
Related Tags :
Next Story