காளையார்கோவில், இளையான்குடி ஒன்றிய பகுதி பாசனக்கண்மாய்களில் குடிமராமத்து பணிகள்


காளையார்கோவில், இளையான்குடி ஒன்றிய பகுதி பாசனக்கண்மாய்களில் குடிமராமத்து பணிகள்
x
தினத்தந்தி 26 Aug 2019 3:45 AM IST (Updated: 25 Aug 2019 8:22 PM IST)
t-max-icont-min-icon

காளையார்கோவில், இளையான்குடி ஒன்றிய பகுதிகளில் உள்ள பாசனக் கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.

காளையார்கோவில்,

காளையார்கோவில் மற்றும் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பொதுப்பணித்துறையின் மூலம் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் ஜெயகாந்தன் ஆய்வு செய்தார். அப்போது காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் மூடிக்கரை ஊராட்சியில் ரூ.62 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணியை பார்வையிட்டு கண்மாய்களின் உட்பகுதியில் உள்ள கருவேல மரங்களை முற்றிலும் அகற்றவும், பணிகளை விரைந்து முடிக்கவும் அவர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து மணியன்குடி ஊராட்சியில் ரூ.43.80 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும்குடிமராமத்து பணியை பார்வையிட்டு கண்மாய்க்கு வரும் நீர்வரத்து கால்வாய்களை முழுமையாக சீர் செய்வதுடன், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். மேலும், கண்மாய்களில் ஆக்கிரமிப்புகள் வராமல் இருக்க விவசாயிகள் ஒன்றுகூடி குடிமராமத்து பணி திட்டத்தில் கண்மாய்கள் முழுவதும் கரைகள் அமைக்க வேண்டுகோள்விடுத்தார்.

பின்பு மறவமங்களம் ஊராட்சியில் ரூ.67½ லட்சம் மதிப்பிலும், புல்லக்கோட்டை ஊராட்சியில் ரூ.47.30 லட்சம் மதிப்பிலும், இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் கீழாயூர், மேலாயூர் பகுதிகளில் ரூ.70 லட்சம், அண்டக்குடி ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ.60 லட்சம், இளையான்குடி ஊராட்சியில் ரூ.70 லட்சம், விசவனூர் ஊராட்சியில் ரூ.70 லட்சம், திருவள்ளூர் ஊராட்சியில் ரூ.70 லட்சம் மதிப்பிலும் பாசனக் கண்மாய்களில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று சில கண்மாய்களில் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:- அரசின் சீரிய திட்டங்கள் முழுமையாக நிறைவேற அனைத்து விவசாயிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிமராமத்து பணியில் தங்களது பாசனக்கண்மாய்களை முழுமையாக சீரமைத்து, விவசாய பணிகளுக்கு ஏதுவாக அமைத்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாசனக் கண்மாயிலும் மடைகள், கழுங்குகள் அனைத்தும் சீர்செய்யப்படுகிறது. அதே போல் அக்கிரமிப்புகள் அகற்றவும், தடுப்பு சுவர் கட்டுவதற்கு வாட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டத்தை நல்ல முறையில் விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் மலர்விழி, உதவி பொறியாளர்கள் முத்துராமலிங்கம், கண்ணன், பாஸ்கரன், ராமச்சந்திரன் முன்னோடி விவசாயிகள் சரவணன், மனோகரன், சிவாஜி, கண்ணியப்பன், சந்தனம், துரைசிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story