வில்லியனூர், பாகூர் பகுதிகளில் ஆற்று மணல் கடத்திய 6 பேர் கைது


வில்லியனூர், பாகூர் பகுதிகளில் ஆற்று மணல் கடத்திய 6 பேர் கைது
x
தினத்தந்தி 26 Aug 2019 3:45 AM IST (Updated: 25 Aug 2019 9:36 PM IST)
t-max-icont-min-icon

வில்லியனூர், பாகூர் பகுதிகளில் ஆற்று மணல் கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய மினி வேன், மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வில்லியனூர்,

வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வடமங்கலம் பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மினிவேன் வந்தது. அந்த வேனை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அதில் ஆற்று மணல் ஏற்றப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக மினிவேனில் வந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் பள்ளித்தென்னலை சேர்ந்த மணிகண்டன் (வயது 32), வடமங்கலத்தை சேர்ந்த வேலவன் (35), பார்த்திபன் (21) என்பதும், இவர்கள் வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மினிவேனும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் பாகூரை அடுத்த சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றில் மாட்டுவண்டிகள் மூலம் மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தென்பெண்ணை ஆற்றுக்கு விரைந்து சென்றனர். அப்போது சோரியாங்குப்பம் - குருவிநத்தம் வழியாக 4 மாட்டு வண்டிகளில் மணல் எடுத்துவரப்பட்டன.

இதை பார்த்த போலீசார் மாட்டு வண்டிகளை பிடிக்க விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் 4 பேரும் மாட்டு வண்டிகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓட முயன்றனர். உஷாரான போலீசார் 3 பேரை விரட்டிச்சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் சோரியாங்குப்பத்தை சேர்ந்த காத்தவராயன் (38), புஷ்பராஜ் (20), சித்தார்த் (21) என்பது தெரியவந்தது. தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story