வழக்குப்பதிவு செய்ய எதிர்ப்பு போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டருடன் கைகலப்பு; மின்வாரிய ஊழியர் கைது


வழக்குப்பதிவு செய்ய எதிர்ப்பு போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டருடன் கைகலப்பு; மின்வாரிய ஊழியர் கைது
x
தினத்தந்தி 26 Aug 2019 3:45 AM IST (Updated: 25 Aug 2019 10:26 PM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததற்காக வழக்குப்பதிவு செய்யக்கூடாது என போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருடன் கைகலப்பில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.

திருவொற்றியூர்,

மணலி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழில் மற்றும் போலீஸ்காரர் ஜெகன் ஆகியோர் மணலி சி.பி.சி.எல். தொழிற்சாலை முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது எண்ணூரை சேர்ந்த மின்வாரிய ஊழியரான மணிமாறன் (வயது 45) அந்த வழியாக தனது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். அவரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அதில் அவர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிவந்ததாக தெரிகிறது.

இதையடுத்து அவர் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்ய போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அப்போது மணிமாறன், தனது நண்பரான மற்றொரு மின்வாரிய ஊழியர் பன்னீர்செல்வம் (50) என்பவரை போன் மூலம் தகவல் சொல்லி அங்கு வரவழைத்தார்.

பின்னர் இருவரும் சேர்ந்து வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்று கூறி போக்கு வரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் பொய் வழக்கு போடுவதாகவும் கூறினர்.

அப்போது சப்-இன்ஸ்பெக்டர் எழிலுக்கும், பன்னீர்செல்வத்துக்கும் இடையே வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இதையடுத்து தங்களை பணி செய்யவிடாமல் தடுத்து அவதூறாக பேசி கைகலப்பில் ஈடுபட்டதாக மணலி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் எழில் புகார் கொடுத்தார்,,

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்வாரிய ஊழியர் பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story