இரண்டாம்நிலை- சிறைக்காவலர், தீயணைப்பாளர்களுக்கான தேர்வை 4,803 பேர் எழுதினர் 1,105 பேர் வரவில்லை


இரண்டாம்நிலை- சிறைக்காவலர், தீயணைப்பாளர்களுக்கான தேர்வை 4,803 பேர் எழுதினர் 1,105 பேர் வரவில்லை
x
தினத்தந்தி 26 Aug 2019 4:30 AM IST (Updated: 25 Aug 2019 10:39 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை அருகே நடைபெற்ற இரண்டாம்நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர்களுக்கான தேர்வை 4 ஆயிரத்து 803 பேர் எழுதினர். 1,105 பேர் தேர்வு எழுத வரவில்லை.

திருவரங்குளம்,

தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி தமிழக காவல்துறையில் 2019-20-ம் ஆண்டிற்கு மாநிலம் முழுவதும் உள்ள இரண்டாம்நிலை காவலர், சிறைக்காவலர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பாளர் காலி பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வினை புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 733 ஆண்கள், 1,175 பெண்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 908 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இந்த எழுத்து தேர்விற்கான அழைப்பு கடிதங்கள் இணையதளம் மூலம் அனுப்பப்பட்டு இருந்தன.

இந்த தேர்விற்காக புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சியில் உள்ள ஸ்ரீபாரதி கல்வி நிறுவனம் மற்றும் வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த 2 தேர்வு மையங்களில் நடைபெற்ற எழுத்து தேர்வை ஆண்கள், பெண்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 803 பேர் எழுதினார்கள். ஆயிரத்து 105 பேர் தேர்வு எழுதவரவில்லை.

போலீஸ் பாதுகாப்பு

தேர்வு மையங்களுக்குள் செல்போன், கால்குலேட்டர், பென்சில், ரப்பர் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய மற்ற பொருட்கள் எதையும் கொண்டு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும் தேர்வு எழுத வந்த அனைவரையும் போலீசார் முழுமையாக சோதனை செய்த பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர். மேலும் 2 தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்த தேர்வுக்காக நியமனம் செய்யப்பட்ட டி.ஐ.ஜி. ஆசியம்மாள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த தேர்வு மையங்களுக்கு புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் நேற்று காலை 7 மணி முதல் இயக்கப்பட்டன. இதேபோல தேர்வு முடிந்தவுடன் தேர்வு மையங்களில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Next Story