ஓசூரில் வியாபாரியை கத்தியால் குத்தி ரூ.1½ லட்சம் கொள்ளை-3 பேருக்கு வலைவீச்சு


ஓசூரில் வியாபாரியை கத்தியால் குத்தி ரூ.1½ லட்சம் கொள்ளை-3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 26 Aug 2019 4:30 AM IST (Updated: 25 Aug 2019 11:19 PM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே, வியாபாரியை கத்தியால் குத்தி ரூ.1½ லட்சத்தை 3 பேர் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஓசூர்,

ஓசூரை அடுத்த ஜீமங்கலம் அருகே உள்ள தாசரப்பள்ளியை சேர்ந்தவர் முகுந்தன் (வயது 28). காய்கறி வியாபாரி. மேலும் இவர் பத்தலப்பள்ளி மார்க்கெட்டில் காய்கறி கமிஷன் மண்டி நடத்தி வருகிறார். இவரது மண்டியில் காய்கறி விற்பனை செய்தவர்களுக்கு பணம் வழங்க, தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவரிடம் இருந்து நேற்று முன்தினம் இரவு, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வாங்கி கொண்டு, மீண்டும் மோட்டார்சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

கெலமங்கலம் அருகே வந்த போது, அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர், மோட்டார்சைக்கிளில் லிப்ட் கேட்டு ஏறினார். மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது தொரப்பள்ளி அக்ரஹாரம் தென்பெண்ணை ஆறு பக்கமாக வருமாறு அந்த நபர், யாரிடமோ செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்று மேம்பாலத்தில் இறங்குவதாக கூறி மோட்டார்சைக்கிளை நிறுத்த சொன்ன அந்த நபர் அங்கு நின்று கொண்டிருந்த 2 பேருடன் சேர்ந்து முகுந்தனை கத்தியால் கழுத்து மற்றும் கையில் குத்தினார். மேலும் முகுந்தன் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை கொள்ளையடித்து கொண்டு அந்த 3 நபர்களும் அங்கிருந்து சென்று விட்டனர். இதில் காயம் அடைந்த முகுந்தனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து முகுந்தன் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். காய்கறி வியாபாரியை கத்தியால் குத்தி பணத்தை கொள்ளை யடித்து சென்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story