பா.ஜ.க. அரசு, காங்கிரஸ் வளரக்கூடாது என்பதற்காக ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளது
காங்கிரஸ் வளரக்கூடாது என்ற எண்ணத்தில் ப.சிதம்பரத்தை பா.ஜ.க. அரசு கைது செய்துள்ளது என்று காட்டுமன்னார்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
காட்டுமன்னார்கோவில்,
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் காட்டுமன்னார்கோவில் செட்டித்தெருவில் நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட தலைவர் நகர்.பெரியசாமி தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் சங்கர், பாபுராஜன், தமிழ்வாணன், வைத்தியநாதசாமி, காட்டுமன்னார்கோவில் நகர தலைவர் அன்வர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்நாதன் வரவேற்றார்.
கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியதாவது:-
இந்த மண்ணில் மறைந்த முன்னாள் எம்.பி. இளையபெருமாளை எனது குருவாக நினைத்து செயல்பட்டு வருகிறேன். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் சேர்ந்து மதச்சார்பற்ற கூட்டணி அமைத்து வெற்றிபெற் றோம். தேனி தொகுதியில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அ.தி.மு.க. சொற்ப ஓட்டுகளில் வெற்றிபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக மக்கள் பா.ஜ.க.வையும், அ.தி.மு.க.வையும் நம்பவில்லை.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இந்தியாவின் பொருளாதார மேதையாக விளங்கி வருகிற முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை ஆட்டோ சங்கரை பிடிப்பது போல் சி.பி.ஐ. அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து பிடித்துள்ளனர். அவர் மீது விசாரணை செய்ய வேண்டும் என்றால் அந்த கோப்பில் கையெழுத்து இட்ட 6 செயலாளர்களை விசாரித்துவிட்டு அதற்கு பிறகு ப.சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும். ஆனால் பா.ஜ.க. அரசு காங்கிரஸ் கட்சி வளரக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
பா.ஜ.க. அரசு இந்தியாவில் உள்ள தேர்தல் ஆணையம், நீதிமன்றங்களை கூட விட்டு வைக்கவில்லை. இதை பொதுமக்கள் பார்த்து வருகின்றனர். மேலும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தங்கள் வீடுகளில் உள்ளவர்கள் முதல் படிப்படியாக மாநிலம் வரை கட்சியை வளர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்லபிரசாத், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மணிரத்தினம், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கமல் மணிரத்தினம், மாவட்ட துணை தலைவர் ஆசிரியர் ராமன் ஆகியோரும் பேசினார்கள். கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் ஜோதிபாசு, ஐக்கிய அரபு அமீரக தலைவர் அப்துல் மாலீக், மாநில பொதுக்குழு உறுப்பினர் சித்தார்த்தன், லால்பேட்டை நகர தலைவர் ஹிதாயத்துல்லா, மாவட்ட பொது செயலாளர்கள் ஜின்னா, ரிஸ்வான், மாவட்ட செயலாளர்கள் அண்ணாதுரை, ஷானுஜாக்கீர், மாவட்ட மகளிர் அணி தலைவி கரோலின் அண்ணாதுரை, இளைஞர் காங்கிரஸ் தலைவர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் ரெங்கநாதன், மோகன்தாஸ், தவர்த்தாம்பட்டு விஸ்வநாதன், பாலசுந்தரம், கார்த்திக் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமொழி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story