சூரியனை சுற்றி தோன்றிய ஒளிவட்டம்; மக்கள் ஆர்வமாக பார்த்தனர்


சூரியனை சுற்றி தோன்றிய ஒளிவட்டம்; மக்கள் ஆர்வமாக பார்த்தனர்
x
தினத்தந்தி 25 Aug 2019 10:45 PM GMT (Updated: 25 Aug 2019 6:33 PM GMT)

சூரியனை சுற்றி தோன்றிய ஒளிவட்டத்தை மக்கள் ஆர்வமாக பார்த்தனர்.

ஈரோடு,

ஈரோட்டில் நேற்று காலையில் இருந்தே வெயில் அதிகமாக இருந்தது. கோடை காலத்தைபோல வெயில் வாட்டி எடுத்தது. இந்தநிலையில் பகல் 11 மணிஅளவில் திடீரென சூரியனை சுற்றிலும் ஒளிவட்டம் தோன்றியது. அதில் சூரியன் பிரகாசமாக ஒளிர்ந்தது. அதனை சுற்றிலும் சற்று இருள் படிந்த பெரிய வட்டம் தோன்றியது. வட்டத்தின் விளிம்பில் வானவில் போன்ற நிறங்கள் சூழ்ந்து இருந்தன.

இது பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைத்தது. ஈரோடு கிருஷ்ணம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் வீதிகளில் திரண்டு வந்து ஆர்வமாக சூரியனின் ஒளிவட்டத்தை பார்த்தனர். பெரும்பாலானவர்கள் மொட்டை மாடிக்கு சென்று வானத்தில் ஆபூர்வமாக தோன்றிய ஒளிவட்டத்தை பார்த்து ரசித்தனர். மேலும், அவர்கள் தங்களது செல்போனில் புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதைத்தொடர்ந்து இந்த தகவல் வேகமாக பரவியது. இதனால் ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, சித்தோடு, பவானி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் ஒளிவட்டத்தை நேரில் பார்த்தனர். 2 மணிநேரத்துக்கும் மேலாக இந்த ஒளிவட்டம் நீடித்தது.

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர் மணி கூறும்போது, “வானத்தில் மழை மேகங்கள் சூழ்ந்து இருக்கும்போது சூரிய ஒளி 22 டிகிரியில் விழுந்தால் ஒளிச்சிதறல் ஏற்படுகிறது. அப்போது சூரியனை சுற்றிலும் இதுபோன்ற வளையம் ஏற்படுகிறது. இதேபோல் நிலவிலும் வளையம் தோன்றும். இது ஒளிச்சிதறலின் ஓர் பரிணாமமாகும்”, என்றார்.

Next Story