மாவட்ட செய்திகள்

வேதாரண்யத்தில் இரு தரப்பினர் மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு; ஜீப்புக்கு தீ வைப்பு வன்முறையால் பதற்றம் + "||" + Two sides clash in Vedaranyam: Ambedkar statue collapses; Tension caused by fire to jeep

வேதாரண்யத்தில் இரு தரப்பினர் மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு; ஜீப்புக்கு தீ வைப்பு வன்முறையால் பதற்றம்

வேதாரண்யத்தில் இரு தரப்பினர் மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு; ஜீப்புக்கு தீ வைப்பு வன்முறையால் பதற்றம்
வேதாரண்யத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஜீப்புக்கு தீ வைக்கப்பட்டது. அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. அடுத்தடுத்து நடந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ராஜாளிக்காட்டில் இருந்து ஜீப்பில் ஒருவர் நேற்று மாலை வேதாரண்யத்துக்கு வந்தார். வேதாரண்யம் போலீஸ் நிலையம் எதிரே வந்தபோது ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது24) என்பவர் மீது ஜீப் எதிர்பாராதவிதமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் காயத்துடன் கிடந்த அவர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்த விபத்து காரணமாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் போலீஸ் நிலையம் எதிரே நின்று கொண்டிருந்த அந்த ஜீப்புக்கு திடீரென தீ வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வலுத்து, வன்முறையாக மாறியது.

அதே பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையையும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் உடைத்தனர். தொடர்ந்து கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. போலீஸ் நிலையம் மீதும் போலீசார் மீதும் கற்கள் வீசப்பட்டன. ஜீப்புக்கு தீ வைப்பு, அம்பேத்கர் சிலை உடைப்பு, போலீஸ் நிலையம் மீது கல்வீச்சு என அடுத்தடுத்து நடந்த வன்முறை சம்பவங்களால் வேதாரண்யம் போலீஸ் நிலையம் அமைந்துள்ள பகுதி ஒரே பரபரப்பாக காட்சி அளித்தது.

வேதாரண்யம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஜன்னல் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. வன்முறையை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக பஸ் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. வேதாரண்யம் நகரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன.

இதனிடையே வேதாரண்யம் பகுதிக்கு வந்த அகஸ்தியன்பள்ளி கூத்ததேவன்காடு பாபுராஜன் (30), ராஜாளிக்காட்டை சேர்ந்த சரத்குமார் (27) ஆகிய 2 பேர் மர்ம கும்பலால் தாக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரு தரப்பு மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து வேதாரண்யத்தில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜசேகரன், துரை, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருமேனி, முருகவேல், இன்ஸ்பெக்டர் சுபாஷ்சந்திரபோஸ் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். நேற்று இரவு அதிவிரைவு படை மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

வன்முறை காரணமாக வேதாரண்யத்தில் இருந்து நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், தஞ்சாவூர், வாய்மேடு, துளசியாப்பட்டினம், முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, கரியாப்பட்டினம், கோடியக்கரை உள்ளிட்ட இடங்களுக்கு பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இதனால் பயணிகள் அவதிக்கு ஆளாயினர். பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்தும், சிலையை உடைத்தவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் நாகை-நாகூர் மெயின்ரோடு வெளிப்பாளையம் வண்டிப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். அப்போது அம்பேத்கர் சிலையை உடைத்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் நாகூர், திருமருகல் ஆகிய இடங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. மயிலம் அருகே, சாமி ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே மோதல், பதற்றம்-போலீஸ் குவிப்பு
மயிலம் அருகே சாமி ஊர்வலத்தின்போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
2. பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் காயமடைந்த இளைஞர் சாவு - ஸ்ரீநகரில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்
பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் காயமடைந்த இளைஞர் உயிரிழந்தார். இதனால் ஸ்ரீநகரில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
3. புவனகிரியில் பரபரப்பு, விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல் - 5 பேர் கைது
புவனகிரியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. வேதாரண்யத்தில் பஸ்கள் இயங்கின; கடைகள் திறப்பால் இயல்பு நிலை திரும்பியது
வேதாரண்யத்தில் நேற்று வழக்கம்போல் பஸ்கள் இயங்கின. கடைகள் திறக்கப்பட்டன. இதனால் அங்கு இயல்பு நிலை திரும்பியது. அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியதாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
5. வேதாரண்யத்தில், இருதரப்பினரிடையே மோதல்: 2-வது நாளாக கடைகள் அடைப்பு; 28 பேர் கைது
வேதாரண்யத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டனர். 2-வது நாளாக நேற்றும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் தலைமையில் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.