தமிழ் கலாசாரத்தால் ஏற்பட்ட காதல்: ஜப்பான் பெண், கும்பகோணம் விஞ்ஞானியை மணந்தார் உறவினர்கள் நெகிழ்ச்சி


தமிழ் கலாசாரத்தால் ஏற்பட்ட காதல்: ஜப்பான் பெண், கும்பகோணம் விஞ்ஞானியை மணந்தார் உறவினர்கள் நெகிழ்ச்சி
x
தினத்தந்தி 26 Aug 2019 4:15 AM IST (Updated: 26 Aug 2019 12:08 AM IST)
t-max-icont-min-icon

தமிழ் கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு காதலில் விழுந்த ஜப்பான் பெண், கும்பகோணம் விஞ்ஞானியை மணந்தார். இந்த திருமணம் மணமக்களின் உறவினர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் விவேகானந்தா நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார். ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுடைய மகன் வசந்தன் (வயது32). இவர் அறிவியலில் பல்வேறு ஆய்வுகள் செய்து பட்டம் பெற்றவர். ஜப்பான் நாட்டில் விஞ்ஞானியாக வேலை பார்த்து வருகிறார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்த யசுஷிசுகி மொதொ- இகுகொ தம்பதியின் மகள் மெகுமி(28). இவர் ஜப்பானில் உள்ள தனியார் நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

வசந்தன், மெகுமி ஆகிய 2 பேரும் முகநூல் (பேஸ்புக்) மூலம் நண்பர்களாகி உள்ளனர். வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் கல்வி, ஆராய்ச்சிகள், பெற்றோர் மீது தனக்கு உள்ள பாசம், தமிழ் பண்பாடு-கலாசாரம் உள்ளிட்டவை குறித்த விவரங்களை பதிவு செய்து வைத்திருந்தார். இந்த விவரங்களை பார்வையிட்ட மெகுமிக்கு தமிழ் பண்பாடு மீது ஈர்ப்பு ஏற்பட்டது.

காதலாக மாறியது

தமிழ் கலாசாரம் அவரை ஈர்த்து, அது வசந்தன் மீது காதலாக மாறியது. காதலை வசந்தனிடம் மெகுமி வெளிப்படுத்தி உள்ளார். இதுபற்றி தனது தந்தையுடன் வசந்தன் ஆலோசித்துள்ளார். இவர்களுடைய காதலை முழுமனதுடன் ஏற்றுக்கொண்ட ஜெயக்குமார் மற்றும் குடும்பத்தினர் வசந்தன்-மெகுமி காதலுக்கு பச்சைக்கொடி காட்டி திருமணத்துக்கு சம்மதித்தனர்.

அதே நேரத்தில் மெகுமியின் குடும்பத்தினரும் திருமணத்துக்கு பூரண சம்மதம் தெரிவித்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த மெகுமி தமிழ் கலாசாரம் பற்றி சமூக வலைதளங்களில் படித்தார். தமிழர்களின் வாழ்க்கை முறை, உறவுகள், குடும்ப வாழ்க்கை ஆகியவை அவரை மிகவும் கவர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து மெகுமி குடும்பத்தினர் திருமணத்தை தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் தமிழ் கலாசார முறைப்படி நடத்தலாம் என்ற விருப்பத்தை ஜெயக்குமாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்த ஜெயக்குமார் குடும்பத்தினர் வசந்தன்-மெகுமி திருமணத்தை கும்பகோணத்தில் தமிழ் கலாசாரப்படி நடத்த முடிவு செய்தனர். அதன்படி இவர்களுடைய திருமணம் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

பட்டு வேட்டி- பட்டு புடவை

திருமண விழாவில் ஜப்பான் நாட்டை சேர்ந்த மெகுமியின் உறவினர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி, பட்டு புடவை அணிந்தபடி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அதேபோல வசந்தனின் உறவினர்களும் திருமணத்தில் திரளாக கலந்து கொண்டனர். திருமணத்தின்போது நடந்த ஒவ்வொரு சடங்கிலும் கலந்து கொண்ட ஜப்பான் நாட்டினர் கைதட்டி ஆரவாரம் செய்து மணமக்களை உற்சாகப்படுத்தினர். தமிழ் கலாசாரத்தால் ஏற்பட்ட காதல் திருமணம் மணமக்கள் உறவினர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story